
பெண் குழந்தைகளை காப்போம் என்று பிரசாரம் செய்து விட்டு, இப்போது ஆண் பிள்ளைகளை காக்க மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு புறப்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பா.ஜனதா தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனம் முறைகேடாக ஒரே ஆண்டில் ரூ. 80 கோடிக்கு சொத்து சேர்த்ததாக தி வயர் எனும் இணையதளம் அம்பலப்படுத்தியது. இதை மறுத்து மத்திய அமைச்சர்கள் பலர் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நேற்று முன் தினம் டுவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ அமித் ஷா மகன் நிறுவனம் குறித்த செய்தியை பார்த்தபின் மோடி ஏதாவது பேச வேண்டும். மோடி, என்ன காவல்காரராக இருக்கிறாரா? அல்லது அந்த நிறுவனத்தின் கூட்டாளியா? பதில் கூற வேண்டும்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அமித் ஷா மகன் ஜெய் ஷா வுக்கு ஆதரவாக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பல அமைச்சர்கள் ஆதரவாக பேசி வருவது குறித்து ராகுல்காந்தி டுவிட்டரில் நேற்று விமர்சனம் செய்துள்ளார் அவர் கூறுகையில், “ மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற பிரசாரத்தில் இருந்து விலகி, இப்போது ஆண் பிள்ளையை(‘ஷேசாத்’ அமித் ஷா மகன்) காப்போம் என்று மாறிவிட்டது வியப்பாக இருக்கிறது. ஜெய் ஷா வின் நிறுவனத்துக்கு ஆதரவாக அமைச்சர் பியூஷ் கோயல் 2-வது நாளாக கருத்து தெரிவித்துள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளார்.