Modi 3.0 : புதிதாக அமைந்துள்ள 18ஆவது மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 18ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Modi 3.0 : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் மற்றும் அக்கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்ந்து 71 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள். 36 பேர் இணையமைச்சர்கள். 5 பேர் சுயாதீன பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் உள்ளனர். அவர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் பதவி: சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைக்கும் பாஜக - யார் இந்த புரந்தேஸ்வரி?
அதேசமயம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்ய வேண்டியதிருக்கிறது. அப்போதுதான் தேர்தல் நடைமுறைகள் முழுவதுமாக முற்றுப்பெறும். முன்னதாக, பிரதமர் மோடி பரிந்துரையை ஏற்று 17ஆவது மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்த நிலையில், புதிதாக அமைந்துள்ள 18ஆவது மக்களவையின் முதல் கூட்ட எப்போது நடைபெறும் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, வருகிற 18ஆம் தேதியன்று புதிதாக அமைந்துள்ள 18ஆவது மக்களவையின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைதினம் கூட்டம் நடைபெறும் பட்சத்தில், இடைக்கால சபாநாயகருக்கு குடியரசுத் தலைவர் முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதன்பிறகு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும் இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இந்த செயல்முறை ஜூன் 20ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது. இதையடுத்து, மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் ஜூன் 20ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. ஜூன் 21ஆம் தேதி இரு அவைகளிலின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் கூட்டு உரை நிகழ்த்துவார் என கூறப்படுகிறது.