
செல்போன்களுக்கு 10 இலக்க எண்ணில் இருந்து 11 இலக்காக மாற்ற தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளது.
செல்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்ராய்டு போன்களின் வரவு, மக்களிடம் அசுர வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 10 இலக்க எண்களை மாற்றி 11 இலக்க எண்களாக கொண்டு வருவதற்கு, தொலை தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.
செல்போன்களுக்கு 10 இலக்க எண்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. கடந்த 2003–ம் ஆண்டு 10 இலக்க எண்களை அறிமுகப்படுத்திய தொலைதொடர்பு துறை, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த எண்களை பராமரிக்க முடிவு செய்திருந்தது.
ஆனால் செல்போன் பயன்பாடு மற்றும் தொலைதொடர்பு துறையின் அசுர வேக வளர்ச்சியால் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
இதனால் செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் விரைவில் சிக்கல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளது.