விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோரமண்டல் ரயில் தவறான பாதையில் சென்றதால் விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் - பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர். ஒடிசா மாநில அரசின் பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம் என பல அமைப்புகளும் நேற்று முதல் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் தற்போது மீட்பு பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் தமிழக அமைச்சர்கள் அதிகாரிகள் அடங்கிய குழுவும் ஒடிசா விரைந்துள்ளது. இதே போல் பிரதமர் மோடியும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒடிசா செல்ல உள்ளார்.
இந்நிலையில் இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளனர். விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோரமண்டல் ரயில் தவறான பாதையில் சென்றதால் விபத்து நடந்திருக்கலாம். இதற்கு முழுக்க முழுக்க மனித தவறு தான் காரணம். எனினும் முழுமையான ஆய்வுக்கு பின்னரே விபத்துக்கான காரணம் கண்டறியப்படும்.” என்று தெரிவித்தனர்.
இதனிடையே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணியளவில் பஹாநகர் பஜார் நிலையத்தைக் கடந்ததும் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பிரதான பாதைக்கு பதிலாக மற்றொரு பாதையில் சென்றதாக ரயில்வேயின் காரக்பூர் கோட்டத்தின் சிக்னல் கட்டுப்பாட்டு அறையின் வீடியோவில் தெரியவந்ததாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மணிக்கு 127 கிமீ வேகத்தில் பயணிக்கும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலுடன் மோதி மெயின் லைனில் தடம் புரண்டதாக ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சில நிமிடங்களில், ஹவுரா செல்லும் யஷ்வந்த்நகர் எக்ஸ்பிரஸ், எதிரே வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது மோதியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
“இது எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்பது ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ள விரிவான விசாரணையில் தெரியவரும். ஆனால், முதன்மையான பார்வையில் இது ஒரு மனித தவறு என்று தோன்றுகிறது, ”என்று பெயர் குறிப்பிட விரும்பாத ரயில்வே அதிகாரி கூறினார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபிரோசாபாத்தில் 1995 இல் இதேபோன்ற விபத்து ஏற்பட்டது, அங்கு மூன்று ரயில்கள் மோதின. இந்த விபத்தில் 350 பேர் பலியாகினர், மீட்புப் பணிகள் மூன்று நாட்களாக நீடித்தன என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.