
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, வன்முறை மற்றும் வகுப்புவாத உணர்வைத் தூண்டும் கருத்துகளைப் பரப்பியதற்காக பல யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 63 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில் இந்த யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட சேனல்களில் டான், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ் மற்றும் சுனோ நியூஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் அடங்கும். பத்திரிகையாளர்கள் இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா மற்றும் முனீப் ஃபரூக் ஆகியோரின் யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், சமா ஸ்போர்ட்ஸ், உசைர் கிரிக்கெட் மற்றும் ராசி நாமா ஆகியவையும் தடைசெய்யப்பட்ட சேனல்கள் பட்டியலில் உள்ளன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், இந்த யூடியூப் சேனல்கள் தவறான கட்டுக்கதைகள் மற்றும் தகவல்களைப் பரப்பி வருகின்றன என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவம் மறறும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலும் வகுப்புவாத உணர்வை அதிகரிக்கும் வகையிலும் இந்தச் சேனல்கள் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து இந்தச் சேனல்களை அணுக முயற்சித்தால் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் "தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அரசாங்கத்தின் உத்தரவின் காரணமாக இந்த சேனல்களை தற்போது இந்தியாவில் பார்வையிட முடியாது இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, கூகுள் வெளிப்படைத்தன்மை அறிக்கையைப் (transparencyreport.google.com) பார்வையிடவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.