
மேட்டூர் அணை வழக்கம் போல் இந்த ஆண்டும் வறண்டு காணப்படுவதால் இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை வறண்டு கிடப்பதால் ஜூன் 12ல் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதாலும் காவிரியில் இருந்து கர்நாடகா வழக்கம்போல் தண்ணீர் திறந்து விடாததாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23.56 அடியாக குறைந்து விட்டது. இதனால் அணை குட்டைபோல் காட்சியளிக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பகுதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றால், அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடியாக இருக்க வேண்டும்.
மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஒரே சீராக இருந்தால் மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடமுடியும்.
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பதால் அப்பகுதி விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
மேட்டூர் அணை பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது.
இந்த ஆண்டு தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை எப்படி மேற்கொள்வது என கவலை அடைந்துள்ளனர்.
குறுவை சாகுபடி பொய்த்துப் போனது மட்டுமல்லாமல் , சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி மூலம் மிக குறைந்த அளவிலேயே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் மழை கை கொடுத்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.