
விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும், மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜ் அமைப்பு இன்று நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் படுதோல்வி அடைந்துள்ளது.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போன்று கர்நாடகாவிலும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டவேண்டும் என்றும் வலியுயிறுத்தி, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் என அச்சம் ஏற்பட்ட நிலையில், கர்நாடக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.
ரயில்கள் போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் இல்லாததால், தொழிலாளர்களும், அலுவலகம் செல்வோரும் தங்களது வழக்கமான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திலிருந்த கர்நாடகாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் இன்று காலை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சில மணி நேரங்களில் ஓசூரிலிருந்து தமிழக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கர்நாடகா அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதனால், பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதுபந்த்தையொட்டி கர்நாடகா மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.