
ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தபோது, தான் ஒரு மாற்றுத்திறனாளி என்று குறிப்பிட்ட பின்பும், மேல்படுக்கை ஒதுக்கப்பட்டதால், தரையில் படுத்து மாற்றுத்திறனாளி வீராங்கனை பயணம் செய்த அவலம் நடந்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதியளித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சுவர்ணராஜ், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கணையான இவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவில் இருமுறை பதக்கங்களை வென்றுள்ளார். இவர் இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அமைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சுவர்ணராஜ் நேற்றுமுன்தினம் நாக்பூரிலிருந்து டெல்லிக்கு செல்வதற்கு காரிப் ராத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்திருந்தார். இதில் தான் ஒரு மாற்றுத்திறனாளி தனக்கு கீழ்தளப்படுக்கை ஒதுக்க வேண்டும் என விண்ணப்பமும் செய்துள்ளார். ஆனால், அவருக்கு மேல் படுக்கை வசதி ஒதுக்கப்பட்டிருந்தது.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவர் மேலே ஏறிச் சென்று படுக்க முடியாது என்பதால், டிக்கெட் பரிசோதகரிடம் கீழ்தள படுக்கை வசதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை டிக்கெட் பரிசோதகர் கண்டுகொள்ளவில்லை.
இதனையடுத்து, அவர் இரவில் தரையில் படுத்து உறங்கியுள்ளார். மேலும், அன்று இரவே ரெயில்வே அமைச்சகத்திற்கும் அவர் டுவிட்டரில் தகவல் தெரிவித்து, தனது நிலை குறித்து ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தை அடைந்ததும், சுவர்ணராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மாற்று திறனாளிகளுக்கான பெட்டியில் நான் டிக்கெட் எடுத்து இருந்தேன், ஆனால் எனக்கு மேல் படுக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
நான் தரையில்தான் படுத்து தூங்கினேன். எனக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்க கூட ஆள் கிடையாது. எனக்கு ஒரு போர்வை கொடுங்கள் என்று ரெயில்வே உதவியாளரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே போர்வை இருக்கிறது என்றுகூறிவிட்டார்கள்.
நான் டிக்கெட்டுக்கான முழு கட்டணமும் செலுத்தியபின்பும், எனக்கு இருக்கை ஒதுக்கவில்லை, எனக்கு கழிப்பறை செல்லக்கூட வசதி ஏற்படுத்தி தரவில்லை.
நான் சர்வதேச நிலையில் உதவியை நாடவில்லை, ஒரு மனிதாபிமான உதவி கூட செய்யவில்லை. அமைச்சர் சுரேஷ் பிரபு மாற்று திறனாளிகளுக்கான பெட்டியில் பயணம் செய்ய வேண்டும், அப்போதான் அவருக்கு உண்மை என்னவென்று தெரியும்” எனத் தெரிவித்தார்.
இவரின் செய்தி வெளியானதும், மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் “இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.