வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? யாருக்கு என்ன பலம்?

By Manikanda Prabu  |  First Published May 29, 2024, 5:50 PM IST

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? அவர்களது பலம் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதிக்கு இறுதிகட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியானது நாட்டின் விவிஐபி தொகுதியாகும். இந்த தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிட 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 33 பேரின் வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டன. ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி, வாரணாசியில் பிரதமர் மோடி உட்பட 7 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். கடந்த இரண்டு தேர்தல்களை பார்த்தால், 2014 இல், வாரணாசியில் மொத்தம் 42 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அந்த தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 2ஆம் இடம் பிடித்தார். 2019 தேர்தலில் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அந்த தேர்தலிலும் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி ராய் 2ஆவது இடம் பிடித்தார். ஆனால், இந்த தேர்தலில் பிரதமர் மோடியுடன் சேர்த்து மொத்தம் 7 வேட்பாளர்களே களத்தில் உள்ளனர். இதில், இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

வாரணாசி மக்களவைத் தொகுதி பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் 1991ஆம் ஆண்டு முதல் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இடையில், 2004இல் ஒரே ஒரு முறை மட்டுமே காங்கிரஸின் ராஜேஷ் குமார் மிஸ்ரா வெற்றி பெற்றார். இந்த தொகுதியில், பிராமணர்கள், பூமிஹார்ஸ் மற்றும் ஜெய்ஸ்வால்கள் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். இவர்களைத் தவிர முஸ்லிம்கள் மற்றும் ஓபிசிக்களும் அதிக அளவில் உள்ளனர்.

இந்த நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? அவர்களது பலம் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்தியா கூட்டணி வேட்பாளர் அஜய் ராய்


பிரதமர் மோடியை எதிர்த்து மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் களம் காண்கிறார். கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் 'பாகுபலி' என்று பிரபலமாக அழைக்கப்படும், 54 வயதான அஜய் ராய், 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடியிடம் தோல்வியடைந்தார். அந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் மூன்றாம் இடம் பிடித்தார்.

மகனுக்கு ரூ.640 கோடி வில்லாவை திருமண பரிசாக கொடுத்த நிடா அம்பானி!

பூர்வாஞ்சலை சேர்ந்த அஜய் ராய், தனது அரசியல் வாழ்க்கையை பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) உறுப்பினராகத் தொடங்கியவர். 1996, 2002, 2007 தேர்தல்களில் பாஜக சார்பில் உத்தரப்பிரதேசத்தின் கோலஸ்லா சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதையடுத்து, 2009ஆம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்த அவர், மக்களவைத் தேர்தலில் பாஜகவின் முரளி மனோகர் ஜோஷியிடம் தோல்வியடைந்தார்.

அதன்பிறகு, 2012ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அஜய் ராய், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். அஜய் ராய், பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது சமூகம், கிழக்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் செல்வாக்கும் அரசியல் பலமும் கொண்டது. பூர்வாஞ்சல் ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. ஆனால் இப்போது அந்த பிராந்தியத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது. இருப்பினும், அஜ்ய் ராயின் சாதிய பின்னணி காரணமாக, பிரதமர் மோடிக்கு வலுவான சவாலாக இருப்பார் என காங்கிரஸ் நம்புகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் அதர் ஜமால் லாரி


பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதர் ஜமால் லாரி (70) இங்கு போட்டியிடுகிறார். அவர், 1960 களில் இருந்து சோசலிச அரசியலுடன் தொடர்புடையவர். ஜனதா கட்சியிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1984 ஆம் ஆண்டில், அவர் முதல் முறையாக வாரணாசி தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் தோல்வியடைந்தார், அதன் பிறகு 1991ஆம் ஆண்டில், அவர் ஜனதா தளம் சார்பில் வாரணாசி கான்ட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2004 இல், அப்னா தளம் சார்பாக போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2022 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை ஆதரித்த அவர், தற்போது பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

யுக துளசி கட்சியின் கோலிசெட்டி சிவ குமார்


ஐதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட கோலிசெட்டி சிவ குமார், யுக துளசி கட்சி சார்பாக வாரணாசியில் களம் காண்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினரான இவர், பசுக்களின் பாதுகாப்புக்காக நீண்ட காலமாக உழைத்தவர். 1,500 மாடுகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கும் மூன்று மாட்டு கொட்டகைகளின் உரிமையாளரான இவர். பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். அவரது தேர்தல் பிரசாரத்திலும் இதனை முன்னிறுத்தியுள்ளார்.

அப்னா தல் (கமேராவாடி) வேட்பாளர் ககன் பிரகாஷ் யாதவ்


தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை எனக் கூறி சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து அண்மையில் பிரிந்த எம்.எல்.ஏ. பல்லவி படேலின் அப்னா தல் (கமேராவாடி) கட்சி சார்பாக ககன் பிரகாஷ் யாதவ் (39) என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு அசாதுதீன் ஒவைசியின் கட்சி ஆதரவும் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் வேட்பாளர் பிரகாஷ் யாதவின்  சகோதரர் உயிரிழந்ததால் அவரது பிரசாரம் நிறுத்தப்பட்டது.

சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ் குமார் யாதவ் மற்றும் சஞ்சய் குமார்


தினேஷ் குமார் யாதவ் மற்றும் சஞ்சய் குமார் திவாரி ஆகிய இருவர் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் சுயேச்சையாக களம் காண்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக உள்ளூர் அரசியலில் தினேஷ் குமார் யாதவ் தீவிரம் காட்டி வருகிறார். டெல்லியில் சமூக நலப் பணிகளை சஞ்சய் குமார் திவாரி மேற்கொண்டு வருகிறார்.

click me!