ஒடிசாவில் பாஜக ஆட்சியமைந்ததும் முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன. இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவில் பாஜக ஆட்சியமைந்ததும் முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.
undefined
ஒடிசாவின் மயூர்பஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “முதல்வர் நவீன் பட்நாயக்கின் நலம் விரும்பிகள் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளனர். ஒரு வருடத்தில் அவரது மிகவும் மோசமடைந்ததைக் கண்டு அவர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இதற்கு பின்னால் ஏதும் லாபி உள்ளதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒடிசாவில் பாஜக ஆட்சியமைந்ததும் முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படும். இந்த விவகாரத்தை விசாரித்து முழுமையான உண்மையை வெளிக்கொணர சிறப்புக் குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக, நவீன் பட்நாயக் தனது வயது மற்றும் உடல்நலத்தை கருத்தில்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்தார். மேலும், நவீன் பட்நாயக் காணொளி வாயிலாக பேசும்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார் எனவும் பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதனிடையே, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மேடை ஒன்றில் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதில், அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருக்க அதனை கேமராவில் இருந்து மறைக்க தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன் முயற்சி செய்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்குவங்க இளைஞர்களின் வாய்ப்புகளை பறிக்கும் ஊடுருவல்காரர்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
அதேபோல், முன்னாள் ஐஏஸ் அதிகாரியும், பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவரும், நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமானவரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் ஆட்சியை கையகப்படுத்த முயற்சிக்கிறார் எனவும், ஒடிசாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கோலோச்சுகிறார் எனவும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், ஒடிசா மண்ணின் மைந்தன் முதல்வராக பதவியேற்பார் என சர்ச்சைகளுக்கு வி.கே.பாண்டியன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதேசமயம், வி.கே.பாண்டியனுக்கு ஒடிசாவில் அதிகரித்து வரும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை பாஜகவினர் வைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு 4,5,6,7ஆவது கட்டம் என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இறுதிகட்டமாக ஜகத்சிங்பூர், கேந்த்ராபாரா, பாலசோர் உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதேபோல், மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பிஜு ஜனதாதளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.