பல அரசியல் கட்சிகளை கதி கலங்க வைத்த தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்புக்குக் காரணமாக இருந்தவர் ஜெயா தாகூர். இவர் யார்? இவருடைய பின்னணி என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தேர்தல் பத்திரத் திட்டத்தை பிப்ரவரி 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதுவரை வழங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பாரத ஸ்டேட் வங்கி இன்று அந்த விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ளது.
முன்னதாக எஸ்பிஐ கூடுதல் ஜூன் 30 வரை கூடுதல் அவகாசம் கேட்ட மனுவை திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் வரவேற்றுள்ளன.
ஆனால், அரசியல் கட்சிகள் பல இந்தத் தீர்ப்பினால் கலக்கம் அடைந்துள்ளன. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது, ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஆதாயம் தேடித் தருவது, நன்கொடை கொடுப்பவர்கள் பதில்பலன் எதிர்பார்க்கலாம் என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் தீரப்பில் கூறியது. கருப்புப் பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள் அவசியம் என்ற அரசு தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் புறந்தள்ளியது.
தேர்தல் பத்திர விவரங்களை அனுப்பியது ஸ்டேட் வங்கி! உடனே வெளியிடுமா தேர்தல் ஆணையம்?
ஜெயா தாகூர் யார்?
இத்தகைய தீர்ப்புக்குக் காரணமாக இருந்தவர் ஜெயா தாகூர். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் மாக்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிரான வழக்கில் மேல்முறையீடு செய்தவர்தான் ஜெயா தாகூர்.
இவர் தனது வழக்கறிஞர் வருண் தாகூர் மூலம் தேர்தல் பத்திரங்களை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கில் தீர்ப்பு வெளியான பின் பேசிய அவர், “இந்தத் தீர்ப்பால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் தனது முடிவை எடுத்துள்ளது” என்று அவர் கூறினார்.
ஜெயா தாகூரின் பின்னணி என்ன?
ஜெயா தாக்கூர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மருத்துவர். மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர்.
இவர் உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த மனுவையும் தாக்கல் செய்துள்ளார். தலைமை நீதிபதி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய சட்டத்திருத்தம் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கியுள்ளது. பிரதமர், பிரதமரால் நியமிக்கப்படும் ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.
மார்ச் 10ஆம் தேதி தேர்தல் ஆணையர் அருண் கோயில் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே இருக்கிறார். இச்சூழலில் புதிய முறையைத் தவிர்த்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய மூவர் குழு தான் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று கோரும் ஜெயா தாக்கூரின் மனு முக்கியத்துவம் பெருகிறது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பத்திர வழக்கில் இன்னொரு டுவிஸ்ட்? குடியரசுத் தலைவர் கையில் ஒரே வாய்ப்பு!