மராத்தா ஒதுக்கீடு போராட்டக்காரர்கள், துணை முதல்வர் அஜித் பவார் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவின் கீழ், அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிர மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, மாநில அரசு மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கியது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நீலையில், மராத்தா ஒதுக்கீடு போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் மனோஜ் ஜராங்கே மாநில அரசு இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, தனது கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவரது உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அந்த வகையில், அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது மராத்தா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களின் சுவரொட்டிகள் கிழித்தெறியப்படுகின்றன. என்சிபி எம்எல்ஏவும், பாஜகவுக்கு ஆதரவளித்து தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவாரின் பங்களா மீது மராட்டிய கிராந்தி போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். முழக்கங்களை எழுப்பியவாறு அவரது வாகனங்கள் மற்றும் உடைமைகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், பாஜக தலைவர் ஜெய்துத்தா க்ஷிர்சாகர் மற்றும் என்சிபி (அஜித் பவார் அணி) எம்எல்ஏ சந்தீப் க்ஷிர்சாகர், ஆகியோரின் அலுவலகங்களுக்கும், என்சிபி (அஜித் பவார் அணி) எம்எல்ஏ பிரகாஷ் சோனன்கியின் வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும், பீட் மாவட்ட பாஜக தலைவர் அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. அகமத்நகரில், பேருந்துகளில் ஒட்டப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் படங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்பு மை பூசி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பாஜக மத்திய அமைச்சர் நாராயண் ரானே மற்றும் சிவசேனா (ஷிண்டே அணி) தலைவர் ராமதாஸ் கதம் ஆகியோருக்கு எதிராகவும் மிரட்டல் விடுத்து போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். வீடு, அலுவலகம், வாகனங்கள் எரிப்பு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சட்டத்தை கையில் எடுப்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
மராத்தா சமூகம் இதற்கு முன்பு மாநிலத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி மொத்தம் 58 அமைதியான போராட்டங்களை நடத்தியதாகவும், ஆனால் இந்த முறை போராட்டங்கள் தவறான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதல்வர் ஷிண்ட தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்: ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவு!
“மராத்தா ஒதுக்கீட்டு போராட்டம் தவறான வழியில் செல்கிறது. இது எதிர்பார்க்கப்படாதது. மராத்தா சமூகம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும்,” என்று கூறிய ஏக்நாத் ஷிண்டே, போராட்டக்காரர்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் தொடர்ந்து எரித்தால், மராத்தா சமூகம் மற்ற சமூகங்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மராத்தா சமூகத்தினரின் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ஹிங்காலியைச் சேர்ந்த சிவசேனா (ஷிண்டே) மக்களவை எம்பி ஹேமந்த் பாட்டீல் தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். அதேபோல், பாஜக எம்எல்ஏ லட்சுமண பவாரும் தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர மாநில சட்டசபை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். மேலும், பலர் ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
மராத்தா சமுதாயத்துக்கு ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான,. மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவர்களின் பிரதிநிதிகள் மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பாய்ஸை சந்தித்து மாநிலத்தில் நிலைமை மோசமாவதை எடுத்துரைத்துள்ளனர்.