Manmohan Singh: மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது இந்தியப் பொருளாதாரத்தை மறுசீரமைத்தார். அவர் பிரதமராக இருந்தபோது, கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்தார்.
மன்மோகன் சிங் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த காலம் இந்தியப் பொருளாதாரம் அதுவரை கண்டிராத வளர்ச்சியை அடைந்த காலம். பிரதமராக இருந்தபோது அவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்தார். அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் மத்தியில் அமெரிக்காவுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை வழிநடத்தினார்.
மென்மையான மற்றும் அமைதியான அரசியல்வாதியாகப் பார்க்கப்பட்டவர் மன்மோகன் சிங். 1991இல் அவர் நிதியமைச்சராகப் பதவியேற்றபோது, இந்தியா கடுமையான நிலுவைத்தொகை நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு அபாயகரமான அளவுக்குக் குறைந்து, இரண்டு வார இறக்குமதிகளை ஈடுகட்டுவதற்குக்கூட போதுமானதாக இல்லை.
undefined
அத்தகைய சூழலில் நாட்டிற்கு தைரியமான சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன. அப்போது பொறுப்பேற்ற நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதாரத்துக்குப் புதிய வடிவத்தைக் கொடுத்தார்.
இந்தியப் பொருளாதாரம் அரசால் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு, சந்தை சார்ந்த, தாராளமயமாக்கப்பட்ட கட்டமைப்பிற்குச் சென்றது. பிரதமர் நரசிம்ம ராவின் ஆதரவோடு தொடர்ச்சியாக அற்புதமான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானர்
அந்நிய நேரடி முதலீட்டுக்கு (FDI) வாயில்களைத் திறந்தது பொருளாதாரத்தை வலுப்படுத்தியது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், இந்தியாவின் பொருளாதார திறனை மேம்படுத்தவும் உதவியது. ஜிடிபி வளர்ச்சி விகிதம், ஆண்டுதோறும் சுமார் 3-4% என நலிந்துகொண்டிருந்த நிலையில், மன்மோகன் சிங் பிரதமரான காலத்தில் சராசரியாக 7.7% ஆக உயர்ந்தது.
2001ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமரானார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்குத் தலைமையேற்று நடத்தியபோது, அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு, இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்தார். இந்த ஒப்பந்தம், சிவில் அணுசக்தி திட்டத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒத்துழைப்பதை உறுதிசெய்தது.
அப்போதைய குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உதவியுடன், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த சில கட்சிகளை மன்மோகன் சிங் சமாதானப்படுத்தினார். ஆனால், இடதுசாரிக் கட்சிகள் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து, யுபிஏ அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றன.
உலகிற்கே பொருளாதாரத்தை கற்பித்த மன்மோகன் சிங் கடந்து வந்த கல்வி மற்றும் அரசியல் பாதை!!
இதனால் மன்மோகன் சிங்கின் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்தது. அதில் 275–256 என குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி தப்பிப் பிழைத்தது.
மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் ஜூலை 18, 2005 அன்று அணுசக்தி ஒப்பந்தம் குறித்த கூட்டு அறிவிப்பை வெளியிட்டனர். அது அக்டோபர் 2008இல் நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவை அணுசக்தி நாடுகளில் ஒன்றாக மாற்றியது மட்டுமல்லாமல், அரசின் மக்கள்நலத் திட்டங்களுக்கான தொழில்நுட்ப உதவியை அமெரிக்காவில் இருந்து பெறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் எடுத்த உறுதியான நிலைப்பாடு, இந்தியாவையும் அமெரிக்காவையும் நெருக்கமான நட்பு நாடுகளாக மாற்றியது. 2008ஆம் ஆண்டில் இந்தியாவில் நிலவிய பொருளாதார மந்தநிலையில் அவர் நாட்டை வழிநடத்திய விதம் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பலன் கொடுத்தது. யுபிஏ கூட்டணி அரசு மீண்டும் அமைந்தது. மன்மோகன் சிங் இரண்டாவது முறையாகப் பிரதமரானார்.
மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் 206 இடங்களை வென்றது. 2004 இல் பெற்ற எண்ணிக்கையை விட 61 இடங்கள் அதிகரித்தது. இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியில், பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. ஆனால், இந்தக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மகாத்மாக காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நூறு நாள் வேலை திட்டம் என்று அறியப்படும் இந்தத் திட்டம் உலகின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டமாகவும் அமைந்தது.
இந்தியாவின் பொருளாதாரக் கட்டுமானத்தை உறுதிப்படுத்தியவர் மன்மோகன் சிங். தாராளவாதக் கொள்கைகள் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்தியாவை வலிமையை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறார். அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் மன்மோகன் சிங் என்பதில் சந்தேகமில்லை.