முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92 வயதில் காலமானர்

By SG Balan  |  First Published Dec 26, 2024, 10:22 PM IST

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் தில்லியில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 92.


முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் தில்லியில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 92.

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமான மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து வியாழக்கிழமை மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

சமீப காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக, மன்மோகன் சிங் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போனது. கடைசியாக ஜனவரி 2024 இல் நடந்த மகளின் புத்தக வெளியீட்டு விழாவில்தான் மன்மோகன் சிங் கலந்துகொண்டார்.

மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கத்தின் பிரதமராக இருந்தார். 13வது இந்தியப் பிரதமராகப் பதவி வகித்த அவர், தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக பணியாற்றினார். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.

உலகிற்கே பொருளாதாரத்தை கற்பித்த மன்மோகன் சிங் கடந்து வந்த கல்வி மற்றும் அரசியல் பாதை!!

இந்தியாவின் பொருளாதாரத்தின் சிற்பி:

பிரதமராவதற்கு முன்பு 1991ஆம் ஆண்டு பிவி நரசிம்ம ராவ் அரசில் நிதி அமைச்சராகப் இருந்தார். அப்போது அவரது செயல்பாடுகள் காரணமாக இந்தியாவின் பொருளாதாரத்தின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றபடுகிறார்.

நிதி அமைச்சராக மன்மோகன் சிங்கின் பங்கு நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. அந்நிய கையிருப்பு குறைவதால் இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, அவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகள் திருப்புமுனையாக அமைந்தன.

பொருளாதார நிபுணர் என்ற வகையில் இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுப்பில் அவரது தாக்கம் குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் காலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதற்கு வழிவகுத்தது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கைக் குறிப்பு:

1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி, பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கா என்ற கிராமத்தில் பிறந்தார். அது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. 1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தது. இளமைப் பருவத்திலேயே மன்மோகன் சிங் கல்வியில் சிறந்து விளங்கினார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். 1957இல் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1962 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் DPhil பட்டம் பெற்றார். ஏப்ரல் 2024இல் தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றினார். 1972 முதல் 1976 வரை தலைமைப் பொருளாதார ஆலோசகர் உள்பட பல முக்கிய பதவிகளை வகித்தார்.

1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். அப்போது இந்தியப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் மற்றும் நிதி ஒழுங்குமுறையில் கவனம் செலுத்தினார். 1985 முதல் 1987 வரை திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதார உத்திகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

click me!