ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்தால் அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தனக்கு பாஜகவில் இருந்து அழைப்பு வந்து இருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதல்வராக மணீஸ் சிசோடியா இருந்து வருகிறார். மதுபானக் கடைகள் ஒதுக்குவதில் மற்றும் கொள்கை முறைகேடுகளில் ஈடுபட்டதாக இவர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. கடந்த வாரம் இவருக்கு தொடர்புடைய 31 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்து இருப்பதாகவும், இதில் மேலும் 14 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களிடமும் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அவருக்க எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு இருந்தது. இதற்கு நேற்று பதில் அளித்து இருந்த மணீஷ் சிசோடியா, ''நான் எங்கும் செல்லவில்லை. டெல்லியில்தான் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கிறேன். எங்கு வர வேண்டும் என்று சொல்லுங்கள் வருகிறேன்'' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இவரிடம் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா இருவரும் இன்று குஜராத் செல்கின்றனர். குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், பெரிய அளவில் தேர்தல் களத்தை சந்திக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு இலவசங்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் மணீஷ் சிசோடியா மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளது. இதை எதிர்கொள்வேன் என்று சிசோடியா இன்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தனது பதிவில், ''நான் மகாரானா பிரதாப் வழியில் வந்த ராஜ்புத் வம்சத்தை சேர்ந்தவன். எனது தலையைக் கூட துண்டித்துக் கொள்வேன் ஆனால், ஊழல் சதிகாரர்கள் முன்பு தலை வணங்க மாட்டேன். என் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானது. உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.