மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் செய்ய தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் ஏன் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அமித் ஷா.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து, மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அந்த கொடுமையின் வீடியோ குறித்து பெரும் சர்ச்சை எழுந்துகொண்டு வருகின்றது. இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தான் விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஏன் ஒத்துழைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக சாலைகளில் இழுத்துச் சென்று, அதில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஒரு வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கிய நிலையில், அந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மழைக்காலக் கூட்டத்தொடர்: ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஸ்பெண்ட்!
இந்நிலையில் இன்று மதியம் 2:30 மணிக்கு மக்களவை கூடிய போது பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசத் தொடங்கினார். அப்போது அவர் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளும்கட்சியினரும் விவாதிக்க வேண்டும் கூறுவதாக அமித் ஷா கூறினார். ஆனால் அதை நடக்க விடாமல் எதிர்க்கட்சியினர் தான் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மணிப்பூர் விவகாரத்தில் என்ன நடந்தது என்ற உண்மை நிச்சயம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று அவர் கூறினார். சட்ட விதி 267ன் கீழ் இந்த விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த விதியின் கீழ், சபையில் அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட விஷயம் மட்டும் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபாவில், 27 எம்.பி.க்கள், விதி 267ன் கீழ் விவாதம் நடத்த நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், குறுகிய கால விவாதம் நடத்தும் விதி 176ன் கீழ் மட்டுமே விவாதம் நடந்த மத்திய அரசு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை எதிர்க்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் ஆளும் ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் ககுறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது பாஜக.