ஆட்டத்தைத் தொடங்கி மம்தா பானர்ஜி..? திரிபுராவில் பாஜக ஆட்சியை காலி செய்ய காய்நகர்த்தும் திரிணாமூல் காங்கிரஸ்?

By Asianet TamilFirst Published Jun 18, 2021, 9:49 PM IST
Highlights

திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 

 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இருந்தே மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவின் இணைந்துவந்தனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் என பலர் பாஜகவுக்குத் தாவினர். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. மேற்கு வங்காளத்தில் பாஜக 77 தொகுதிகளில் வென்று முன்னேற்றம் கண்டபோதும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறவில்லை.


இந்நிலையில் மேற்குவங்காளத்தில் மம்தா மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதல்வரானதால், பாஜகவுக்கு சென்றவர்கள் மீண்டும் திரிணாமூலுக்கு திரும்பியப்படி உள்ளனர். அவர்களில் மூத்த தலைவரான முகுல் ராய் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முகுல்ராய் மூலம் திரிபுராவில் நடைபெறும் பாஜக ஆட்சிக்கு எதிராகச் சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமார் தேவ்வுக்கு எதிராக 9 எம்.எல்.ஏக்கள் திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 9 பேரும் முகுல்ராயுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவுக்குப் பதிலடி தர வேண்டும் என்பதிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதிலும் தற்போது மம்தா பானர்ஜி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் மேற்குவங்க அண்டை மாநிலமான திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் முயற்சியை திரிணாமூல் காங்கிரஸ் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
திரிபுராவில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சிக்கலைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் திரிபுரா விரைந்துள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திடீர் அரசியல் மாற்றம் காரணமாக டெல்லி-மேற்குவங்காளம்-திரிபுராவில் அரசியல் மட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!