பாஜக சுவேந்து அதிகாரியின் தந்திரத்தில் வீழ்ந்த மம்தா! வெற்றியை கொண்டாட முடியாத தர்மசங்கடத்தில் திரிணாமூல் காங்

By karthikeyan VFirst Published May 2, 2021, 11:41 AM IST
Highlights

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிக்கும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
 

சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடந்துவருகிறது.

மேற்கு வங்கத்தில் 292(294) தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், 184 தொகுதிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், 104 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன. இடதுசாரி கூட்டணி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

எனவே மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அந்த வெற்றியை கொண்டாட முடியாத தர்மசங்கடமான நிலையில் அக்கட்சி உள்ளது. அதற்கு காரணம், மேற்குவங்க முதல்வரும், முதல்வர் வேட்பாளருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியை விட பின் தங்கியுள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய சுவேந்து அதிகாரி, இந்த தேர்தலில் அவருக்கு தனிப்பட்ட முறையில் பெரும் செல்வாக்கு இருக்கும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். மம்தா பானர்ஜியை வீழ்த்தும் உள்நோக்கத்துடன், நந்திகிராம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று மம்தா பானர்ஜிக்கு சுவேந்து அதிகாரி சவால் விட்டிருந்த நிலையில், சுவேந்துவின் சவாலை ஏற்று அவரது கோட்டையான நந்திகிராம் தொகுதியில் அவருக்கு எதிராக களமிறங்கினார் மம்தா பானர்ஜி.

நந்திகிராம் தொகுதி சுவேந்து அதிகாரிக்கு மிகுந்த செல்வாக்கு நிறைந்த அவரது சொந்த தொகுதி. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், மம்தா பானர்ஜியை விட அதிக வாக்குகளை பெற்று சுவேந்து முன்ன்னிலை வகிக்கிறார். மம்தா பானர்ஜி கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

click me!