நாட்டில் சூப்பர் எமர்ஜென்ஸி விமர்சன பின்னணி.. டெல்லியில் பிரதமர் மோடியை நேருக்குநேர் சந்திக்க தயாராகும் மம்தா!

By Asianet TamilFirst Published Jul 22, 2021, 9:08 PM IST
Highlights

டெல்லி பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்திக்க உள்ளேன் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அடுத்த வாரம் டெல்லி செல்ல இருக்கிறேன். அப்போது பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்திக்க உள்ளேன். பிரதமர் மோடி எனக்கு சந்திக்க நேரம் கொடுத்துள்ளார். பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் 1972-ஆம் ஆண்டில் அமெரிக்காவை உலுக்கிய வாட்டர்கேட் ஊழலைவிட மிகப் பெரியது. அதோடு ஊடகங்கள் மீதான இன்றைய ஐடி ரெய்டும் இணைந்திருக்கிறது. இது இந்தியாவில் ‘சூப்பர் எமர்ஜென்ஸி’ என்ற நிலையை உருவாக்கியுள்ளது.


டைனிக் பாஸ்கர் ஊடகம் மீதும் ஊடக நிறுவனங்களின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒருபுறம் ஐடி ரெய்டு நடத்துவது, இன்னொரு புறம் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம். இதெல்லாம் மிகவும் ஆபத்தானது. எல்லா அமைச்சரவையும் பெகாசஸ் ஒட்டுகேட்பு இயந்திரமாகவே மாற்றப்பட்டிருக்கிறது. இந்த அரசாங்கத்துக்கு அதன் அமைச்சர்கள் மீதே நம்பிக்கை இல்லை. பத்திரிகையாளர்களின் போன்களும் ஒட்டு கேட்கப்படுகிறது.
என்னுடைய தொலைபேசியையும் விட்டுவைக்கவில்லை. இன்று டைனிக் பாஸ்கர் பத்திரிகையை குறிவைத்துள்ளார்கள். அந்தப் பத்திரிகை, மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சித்து எழுதியது. பெகாசஸ் பற்றியும் வெளிப்படையாக செய்திகளை வெளியிட்டது. அதனால், இன்று அந்த செய்தி நிறுவனம் குறிவைக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் ஊடகங்களின் குரல் நெறிக்கப்படுகிறது.” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 

click me!