டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சியமைப்பதற்கான வியூகத்தை முடிவு செய்ய இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் டெல்லியில் உள்ள கார்கேவின் இல்லத்தின் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சியே மத்தியில் அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங் மேக்கர்களாக மாறியுள்ளனர். எனவே, ஆட்சியமைப்பதற்கு அவர்களை அணுகலாமா? அல்லாது வேண்டாமா? எனவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படவுள்ளது.
undefined
இந்தியா கூட்டணி கூட்டத்தில் அதன் தலைவர்களான சரத் பவார், மு.க.ஸ்டாலின், சம்பை சோரன், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதேசமயம், இந்த கூட்டத்தில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களது சார்பாக அக்கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சித் தலைவரும், பாரமதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்: 2019 தேர்தலை விட குறைவான வாக்குகள் பெற்ற திமுக!
அவர்கள் இருவரும் கலந்து கொள்ளாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. காங்கிரஸ் மீதான அதிருப்தி காரணமாக அவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை என சிலர் கூறுகின்றனர். கடந்த 2019 தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்த சிவசேனா அதிக தொகுதிகளை வென்றதாகவும், தற்போது காங்கிரஸ் கூட்டணியில் குறைவான தொகுதிகளை வென்றதால் உத்தவ் தாக்கரே அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், இந்த தேர்தலில் தனக்கு முக்கியத்துவம் தராதது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக காங்கிரஸ் மீது மம்தா இன்னமும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜகவை மம்தா பானர்ஜி விமர்சித்த விதம், இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்தது, இந்தியா கூட்டணி கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜி கலந்து கொள்ளவுள்ளதை சுட்டிக்காட்டும், மேற்கண்ட தகவலில் உண்மை இல்லை என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், ராகுல் காந்தி தலைமையை ஏற்கத் தயாராக இருந்தால், அவரைப் பிரதமர் வேட்பாளராகக் கட்சி ஆதரிக்கும் என சிவசேனா (உத்தவ் தாக்கரே) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியையும் சுட்டிக்காட்டும் அவர்கள், காங்கிரஸ் மீதான அதிருப்தி என்பது பாஜகவினர் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகள் என கூறுகின்றனர்.
“ராகுல் காந்தி தலைமை ஏற்க தயாராக இருந்தால், நாங்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? அவர் ஒரு தேசிய தலைவர், தன்னை நிரூபித்தவர். அவர் பிரபலமானவர். நாம் அனைவரும் அவரை நேசிக்கிறோம். பிரதமர் யார் என்பதில் இந்திய கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை.” என சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.