ஒடிசா முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார்
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.
அந்தவகையில், ஒடிசா மக்களவைத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் பிஜு ஜனதாதளம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
undefined
அதேபோல், ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 1, சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வென்று உள்ளனர். முதல்வர் நவீன் பட்நாயக் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றில் தோல்வியடைந்துள்ளார்.
இதன் மூலம் ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதாதளம் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை புவனேஸ்வரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரகுபர் தாஸிடம் அளித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறாம் - சந்திரபாபு நாயுடு
ஒடிசா மாநிலத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் பிஜூ ஜனதாதளம் ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 5ஆவது முறையாக தொடர்ந்து முதல்வராக உள்ளார். ஒருகாலத்தில் ஒடிசா மாநிலம் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த பிஜு பட்நாயக் ஒடிசா முதல்வராக இருந்தார்.
அதன்பின்னர் பிஜு பட்நாயக், ஜனதா தளத்தில் இணைந்தார். 1990ஆம் ஆண்டில் பிஜு பட்நாயக்கின் ஜனதா தளம் கட்சி ஒடிசாவில் ஆட்சியை பிடித்தது. பிஜு பட்நாயக் மறைவுக்கு பின்னர், அரசியலுக்கு வந்த அவரது மகன் நவீன் பட்நாயக் தனது தந்தையின் பெயரில் பிஜு ஜனதாதளம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 2000, 2004, 2009, 2014, 2019 என தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று 24 ஆண்டுகள் ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவி வகித்த நிலையில், தற்போது அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.