72 மணி நேரத்தில் குவிந்த 4 ஆயிரம் இ-மெயில்கள் - கருப்பு பண முதலைகள் குறித்து அரசுக்கு தகவல்

First Published Dec 20, 2016, 3:29 PM IST
Highlights


கருப்பு பணம் பதுக்கி வைத்து இருப்பவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க மத்திய அரசு மின் அஞ்சல் வௌியிட்ட 72 மணி நேரத்துக்குள் 4 ஆயிரம் மின் அஞ்சல்கள் வந்துள்ளன.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் உயர் மதிப்பு கொண்ட ரூ. 500, ரூ.1000  நோட்டுகளை செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து ரூ.2 ஆயிரம், ரூ.500 புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன.



அதோடு வருமான வரித் துறையும் நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களை அறிய வருமான வரித்துறை  blackmoney info@ incometax.gov.inஎன்ற மின்அஞ்சல் முகவரி ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டு இருந்தது. பொதுமக்கள் இந்த இ-மெயில் மூலம் அரசுக்கு கருப்புபணம் பதுக்கியவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்து இருந்தது.

அரசின் இந்த மின்அஞ்சலுக்கு கடந்த 3 நாட்களில் மட்டும் 4 ஆயிரம் இ-மெயில்கள் குவிந்துள்ளன.

இதுகுறித்து நிதி அமைச்சக அதிகாரி கூறும்போது, கருப்புப் பணம் பதுக்கியவர்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து 4 ஆயிரம் இ-மெயில்கள் வந்துள்ளன. இது நல்ல வரவேற்பாகும். கருப்பு பணத்தை ஒழிக்க தீவிரமாக சோதனை செய்து வரும் வருமான வரித் துறையினருக்கு இந்த தகவல் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த மின் அஞ்சல்களில் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட அளவு, நகர கூட்டுறவு வங்கிகளில் கணக்குகளில்டெபாசிட் அளவு, வங்கியில் பெற்ற கடன் திருப்பிச் செலுத்திய விவரம், கிரெடிட் கார்டு கட்டணம், மின்னனு பரிமாற்றங்கள், பணம் எடுக்கப்பட்ட அளவு ஆகிய இடம் பெற்றுள்ளது என்றார்.

வங்கிகளில் கருப்பு பணம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, யார் செய்தது உள்ளிட்ட பல விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும், வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினருக்கும் இந்த மின் அஞ்சலில் கிடைத்துள்ளன. ஏற்கனவை கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் வருமான வரித்துறையினருக்கு இந்த தகவலால் நடவடிக்கையை வேகப்படுத்துவார்கள்.

click me!