அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ., அமோல் கோல்ஹே மீண்டும் சரத் பவார் முகாமிற்கு திரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அப்போது, கூவத்தூரில் இருந்த சசிகலா அணியை சேர்ந்த சிலர் ஓபிஎஸ் அணிக்கும், ஓபிஎஸ் அணியில் இருந்து சிலர் சசிகலா அணிக்கும் சென்றனர். அதுபோன்ற காட்சிகள் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறி வருகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போதே அம்மாநில அரசியலில் புயல் வீசியது. தேர்தலின் போது கூட்டணி அமைத்த பாஜக - சிவசேனா இடையேயான மோதல் போக்கால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தலையீட்டின் பேரில், காங்கிரஸ் - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.
தொடர்ந்து இரண்டரை ஆண்டுகாலம் சுமூகமாக ஆட்சியும், கூட்டணியும் சென்று கொண்டிருந்தபோது, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்,. அவரை அரவணைத்த பாஜக, அவரது ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வரானார். சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. தற்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியில். அக்கட்சியின் அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளித்து துணை முதல்வராகியுள்ளார். சிவசேனா பிளவின் போதும் சரி, தேசியவாத காங்கிரஸ் பிளவின் போதும் சரி அதற்கு பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றன. மேலும், ஆளும் கூட்டணியில் இணைந்து அமைச்சர்களானவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகள் நிலுவையில் இருப்பதையும், அதனை காட்டி மிரட்டி அவர்களை பாஜக தன் வசப்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
பலத்தை காட்டிய சரத் பவார்: வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராட அழைப்பு!
2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. இதில் சரத் பவாரின் பங்கு கணிசமாக உள்ள நிலையில், அவரது கட்சி பிளவு பட்டுள்ளது. துணை முதல்வர் அஜித் பவார் தனக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸ் பெயரிலேயே செயல்படப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக ஆதரவும் இருக்கும் பட்சத்தில் சிவசேனா போலவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அஜித் பவார் கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், அஜித் பவார் உள்பட அமைச்சர்களாக பதவியேற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் மனு அளித்துள்ளது. தொடர்ந்து கட்சியை தக்க வைத்துக் கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கையையும் என்சிபி தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ., அமோல் கோல்ஹே மீண்டும் சரத் பவார் முகாமிற்கு திரும்பியுள்ளார். நேற்றைய பதவியேற்பு விழாவில், தாமும் இருந்ததாகவும், ஆனால், மனசாட்சி ஒப்புக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள அமோல் கோல்ஹே மீண்டும் சரத் பவார் அணிக்கு திரும்பியுள்ளார். சரத் பவாரை நாளை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில், இன்னும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் சரத் பவார் அணிக்கு திரும்புவர் என அக்கட்சி தெரிவித்துள்ளது. “சிலர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். பதவியேற்பு விழா குறித்த உண்மை அவர்களிடம் கூறப்படவில்லை; பல தலைவர்கள் மீண்டும் சரத் பவாரிடம் வருவார்கள்.” என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் தெரிவித்துள்ளார்.