
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பாராபுல்லா வடிகால் பகுதியிலுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளன.
மதராஸி முகாம் பகுதியில் ஜூன் 1 அன்று நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தங்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்ப விரும்பினால் தமிழக அரசு முழு ஆதரவை வழங்கும் என உறுதியளித்துள்ளது.
டெல்லியின் தென் கிழக்கு பகுதியிலுள்ள ஜங்புரா மதராஸி முகாமில், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாராபுல்லா வடிகால் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன. கனமழைக்காலங்களில் நீர்வரத்து தடைபட்டு, இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், குறுகலாகிப் போன வடிகால் பாதையை சீர் செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 370 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களில் 189 பேர் மறுவாழ்வுக்குத் தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டு, நரேலா பகுதியில் அவர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 181 பேர் மறுவாழ்வுக்கு தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தென் கிழக்கு டெல்லி மாவட்ட மாஜிஸ்திரேட் அனில் பாங்கா இதுகுறித்து எ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "நீதிமன்ற உத்தரவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். பாராபுல்லா வடிகால் குறுகிப் போனதால், அதை சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கனமழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருந்தது. தற்போது அகற்ற உத்தரவு கிடைத்துள்ளதால், இன்று முதல் பணியைத் தொடங்கியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களில் தகுதியுடைய அனைவருக்கும் நரேலாவில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதுவரை 370 சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இவர்களில் 189 பேர் மறுவாழ்வுக்கு தகுதியானவர்கள், 181 பேர் தகுதியற்றவர்கள்." என்று தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடியிருப்பாளரான மணி, தமிழகத்தில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "தமிழகத்தில் உள்ளவர்களுக்கு முதலில் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும், அதன்பிறகு எங்களை அழைக்க வேண்டும். அங்கே ஏன் மக்கள் சுற்றித் திரிகிறார்கள்? முதலில் தமிழகத்தை சரிசெய்ய வேண்டும், பிறகு டெல்லியைப் பார்க்க வேண்டும். எங்களுக்கு வேலை கிடைத்திருந்தால், ஏன் நாங்கள் தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு வந்திருப்போம்?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
மதராசி முகாமில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்ட பிறகு, தங்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்ப விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகம் திரும்ப ஏற்பாடுகள் செய்வதாகவும் அடிப்படை வசதிகள் கிடைக்க ஆவன செய்வதாகவும் உறுதி அளித்துள்ளது.