
சுமார் 175 பயணிகளுடன் இண்டிகோ விமானம் திங்கள்கிழமை பிற்பகல் ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பறவை மோதியதால் அவசரமாகத் தரையிறங்கியது.
பாட்னாவிலிருந்து வந்த இண்டிகோ விமானம், ராஞ்சியிலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில், 4,000 அடி உயரத்தில் பறவை மோதியதாக ராஞ்சி விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிர்சா முண்டா விமான நிலைய இயக்குனர் ஆர்.ஆர். மவுரியா கூறுகையில், விமானம் 3,000 முதல் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பறவை மோதியதாகத் தெரிவித்தார்.
"விமானி உடனடி நடவடிக்கை எடுத்து பிற்பகல் 1.14 மணிக்கு விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்," என்று மவுரியா கூறினார்.
ஏர்பஸ் A320 ரக விமானத்தில் கழுகு மோதியதால் விமானத்தில் பள்ளம் ஏற்பட்டதாக மவுரியா மேலும் கூறினார். "அனைத்து பயணிகளும், விமான ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர்," என்றார்.
ராஞ்சியை அடைந்த பிறகு, விமானம் கொல்கத்தாவுக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்ததாக மற்றொரு அதிகாரி குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தால், அந்தப் பயணம் பாதிக்கப்பட்டது.