மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக ஆட்சியமைக்கும் என அம்மாநில தலைவர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநிலத்தில் 73.71 சதவீத வாக்குகள் பதிவானதான தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, அம்மாநிலத்தில் 138 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக ஆட்சியமைக்கும் என அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் இதுவரை எந்த முன்னிலை நிலவரங்களை பார்க்கவில்லை. காலை 11 மணி வரை எதையும் பார்க்கப்போவதும் இல்லை. ஏனென்றால், நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் வாக்காளர்களை மிகவும் நம்புகிறேன். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதி.” என்றார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், 4 பாஜகவுக்கு சாதகமாகவும், 4 கருத்துக்கணிப்புகள் நெருக்கமான போட்டி நிலவும் எனவும் கணித்துள்ளன. அதேசமயம், கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட துல்லியமாக கணித்திருந்த சி-வோட்டர், இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என கணித்துள்ளது.
தெலங்கானா தேர்தல் முடிவுகள்: முதல்வர் கேசிஆர் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவு!
மத்திய பிரதேசத்தில் கடந்த 2003, 2008, 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்திருந்தது. 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அம்மாநில முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு சென்றதால் ஒன்றரை ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து, பாஜக ஆட்சி அமைந்தது. சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.