தெலங்கானா தேர்தல் முடிவுகள்: முதல்வர் கேசிஆர் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவு!

By Manikanda Prabu  |  First Published Dec 3, 2023, 9:27 AM IST

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்


மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பதிவான வாக்குகளின் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே பின்னடைவை சந்தித்து வருகிறார். கஜ்வெல் மற்றும் கம்மாரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் கண்ட தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

Latest Videos

undefined

அதேபோல், கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி தெலங்கானாவில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிஜ் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் காங்கிரஸ் உள்ளது. 68 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 35 இடங்களில் பிஆர்எஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளன. பாஜக 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

தபால் வாக்கு எண்ணிக்கை: 4 மாநிலங்களில் யார் முன்னிலை?

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014, ஜூன் 2ஆம் தேதி புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானது. அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, புதிய மாநிலமாக உருவான தெலங்கானாவின் முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார். தெலங்கானா மாநிலம் உருவாக்கத்துக்கு கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த அவரே தற்போதும் முதல்வராக பதவியில் நீடித்து வருகிறார்.

தெலங்கானா மாநில முதல்வராக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருக்கும் கே.சந்திரசேகர ராவ், முதல் ஆட்சிக்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். முதல் ஆட்சி காலத்தின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாகவே அதாவது 9 மாதத்திற்கு முன்பே ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில் 119 தொகுதிகளில் களம் கண்ட கேசிஆரின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, 99 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக உருவெடுத்தது.

அதன் தொடர்ச்சியாக, நடப்பு 2023ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருப்பதால் அவரது கட்சி தோல்வியடையும் எனவும், அம்மாநிலத்தில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையில் முடிவுகளும் வெளியாகி வருகின்றன.

click me!