நான்கு மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டியும், தெலங்கானாவில் பி.ஆர்.எஸ்., பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டியும் நிலவி வருகிறது.
இதில், மிசோரம் தவிர்த்து எஞ்சிய நான்கு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பின்னர், வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்த நிலையில், தபால் வாக்குகள் எண்ணிக்கையின்படி முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில், பாஜக 67 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும், மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
அதேபோல், மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் 29 இடங்களிலிம், பிஆர்எஸ் கட்சி 20 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 35 இடங்களிலும், பாஜக 24 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.