சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி (இன்று) எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டது. அம்மாநிலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி (நாளை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் முன்பு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பின்னர், வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்த தேர்தலில் தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கட்டாயம் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லு ரவி கூறுகையில், “தெலங்கானாவில் காங்கிரஸ் 75-95 இடங்களை கைப்பற்றும். பிஆர்எஸ் 15-20 இடங்களைப் பெறலாம், பாஜக 6-7 இடங்களைப் பெறலாம்.” என்றார்.
கூலிங் கிளாஸ் போட்டு ஜம்முனு போஸ் கொடுத்த கேப்டன்... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா
மேலும், தெலங்கானா காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர்கள் வெற்றி பெறுவார்கள் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும், டிசம்பர் 9ஆம் தேதி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனவும் அப்போஸ்டர்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 75 இடங்களுக்கு மேலான பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என அம்மாநில அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான தாம்ரத்வாஜ் சாஹு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த காங்கிரஸ் வேட்பாளர் தேவேந்திர சிங் யாதவ் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பணிகளை பொதுமக்கள் பார்த்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் வாக்குப்பதிவு நடந்தது. காங்கிரஸ் இன்று மாபெரும் வெற்றி பெறும்.” என்றார்.