மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடியவுள்ளது. இதையடுத்து, அம்மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, மிசோரம் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 17ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது.
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே இரு முனைப்போட்டி நிலவி வருகிறது.
மொத்தம் 2,533 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2,88,25,607 ஆண்கள், 2,72,33,945 பெண்கள் மற்றும் 1,373 மூன்றாம் பாலினத்தவர்கள் என 5,60,60,925 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 2,049 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் ஜோதிராதித்ய சிந்தியா, தனது ஆதரவு 22 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் சேர்ந்தார். இதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்தது. பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் மீது குண்டாஸ்: திமுக அரசின் கோழைத்தனமான செயல் - அண்ணாமலை கண்டனம்!
அதேபோல், மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த 9 தொகுதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 81,41,624 ஆண்கள், 81,72,171 பெண்கள் மற்றும் 684 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 1,63,14,479 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்காக 18,833 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 700 வாக்குச்சாவடிகள் முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படவுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது