சொகுசு கார் வரி ஏய்ப்பு செய்த வழக்கு! க்ரைம் பிரான்ச் முன்பு சரணடைந்த நடிகை அமலாபால்!

First Published Jan 15, 2018, 4:40 PM IST
Highlights
Luxury car tax evasion case actress Amala paul surrenders


சொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நடிகை அமலாபால் கேரள க்ரைம் பிரான்ச் முன்பு இன்று ஆஜரானார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை அமலா பால் தனியார் நிறுவனத்தில் இருந்து பென்ஸ் S- கிளாஸ் வகை கார் ஒன்றை ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்த காரை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது. 

கேரளாவின் கொச்சி நகரில் நிரந்தர முகவரி கொண்டுள்ள அமலா பால், புதுச்சேரியில் நிரந்தர முகவரி இருப்பதாக கூறி காரை பதிவு செய்து 20 லட்சம் ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி அமலாபால் கார் விவகாரம் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துக்கு செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி அமலாபாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.  இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை என தெரிவித்தார். அதேபோல் புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் ஷாஜகான், அமலாபால் வீட்டு முகவரி குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும், புதுச்சேரி முகவரியில் எல்.ஐ.சி. பாலிசயும் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

நடிகை அமலாபால் மீது கேரள க்ரைம் பிரான்ச் போலீசார், 420, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை க்ரைம் பிரான்ச் ஐ.ஜி. இந்திரஜித் விசாரித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை அமலாபால், இன்று கேரளா க்ரைம் பிராஞ்ச் முன்பு சரண் அடைந்தார். க்ரைம் பிரான்ச் முன்பு சரணடைந்த அமாலாபால், கைது நடவடிக்கையில் இருந்து தட்பபிப்பதற்காக முன்ஜாமீன் வைத்திருந்ததாகவும் தெரிகிறது.

கேரளாவில் இதுவரை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சொகுசு காரை வேறொருவர் பெயரில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், நடிகர்கள் பகத்பாசில், சுரேஷ்கோபி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் மீது வரி ஏய்ப்பு செய்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

click me!