
சிறப்பாகவும், சந்தோஷமாகவும் எங்களின் வாழ்க்கை அமைந்தது என்றும் எங்களுக்கு நோய் ஏற்பட்டு அதனால் உயிரிழக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் அதனால் நாங்கள் சாக உரிமை அளிக்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த முதிய தம்பதியினர், குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
மகாராஷ்ட்டிரா தலைநகர் மும்பை புறநகர் பகுதியில், ஓய்வு போற்ற போக்குவரத்து கழக ஊழியர் நாராயண் லவாடே (86) வசித்து வருகிறார். இவரின் மனைவி ஐராவதி (79). இவர், பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
இவர்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில், எனக்கும் என் மனைவுக்கும் எந்தவித நோயும் இல்லாமல் இருக்கிறோம். நாங்கள் வாழ்க்கையை மிக சிறப்பாகவும் சந்தோஷமாகவும் அனுபவித்து உள்ளோம்.
இதுவரை வாழ்ந்ததே எங்களுக்குப் போதும். நாங்கள் நோய் ஏற்பட்டு அதனால் உயிரிழக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. அதேபோல், ஒருவரை விட்டு மற்றொருவர் உயிரிழக்கவும், நாங்கள் விரும்பவில்லை. வாழ்வதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளபோது, சாவதற்கும் உரிமை அளிக்க வேண்டும்.
முதுமையின் காரணமாக நோய் ஏற்பட்டு, அதனால் மற்றவர்களுக்கு தொந்தரவு தர நாங்கள் விரும்பவில்லை. நன்கு வாழ்ந்த திருப்தியுடன் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழக்க விரும்புகிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நாராயண்-ஐராவதி தம்பதியினர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
எங்களால் சமுதாயத்துக்கு எந்தவிதமான உதவியும் இல்லை. எதையும் பங்களிக்க முடியாது. எனவே குடியரசு தலைவர், மரணத்திற்கு உரிமை வழங்குவதற்கான அதிகாரத்தையும் அவர் கொண்டிருக்க வேண்டும் என்றும் நாராயண் கூறினார். ஐராவதி கூறுகையில், எங்கள் வாழ்வில் எந்த துன்பமும் இல்லை; வாழவும் விரும்பவில்லை என்றார். இது தொடர்பாக நாராயண்-ஐராவதி தம்பதியினர், பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் தங்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.