
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி மாணவி நிர்பயா, பேருந்தில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதுபோல அரியனாவில் 15 வயது மாணவி ஒருவர் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியானாவில் உள்ள குருஷேத்தரத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜன்சா என்ற கிராமத்தை சேர்ந்த தையல் தொழிலாளியின் மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தையல் தொழிலாளிக்கு 3 குழந்தைகள். அதில் மூத்தவர் இந்த மாணவிதான்.
மூன்று நாட்களுக்கு முன்பாக அந்த மாணவி காணாமல் போயுள்ளார். இது குறித்து தையல் தொழிலாளி விசாரித்தபோது, அதே ஊரைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவருடன் சென்று விட்டதாக அறிந்தார். இதனைத் தொடர்ந்து தனது மகளை கடத்தி சென்று விட்டதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஊரில் உள்ள கால்வாய் ஒன்றில் அந்த மாணவி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வில், மாணவியின் உடல் முழுவதும் காயங்கள் உள்ளதாகவும், கும்பல் ஒன்று மாணவியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளதாகவும் அறிக்கை அளித்தது.
மாணவியைக் கொன்றது மட்டுமல்லாமல், மிக கொடூரமாகவும் நடந்துள்ளனர். மாணவியின் உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், அவரின் நுரையீரல் பகுதி முழுவதும் சிதைந்துள்ளது.
மாணவியைக் கடத்தி சென்ற வாலிபர் தலைமறைவாக உள்ளார். இந்த கொலைக்கும் வாலிபருக்கும் சம்பந்தம் உள்ளதா? என்றும், வாலிபருடன் மாணவி சென்றபோது, மர்ம கும்பல் மாணவியை இழுத்து சென்று கொடூரமாக நடந்து கொலை செய்துள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.