
பொது இடங்கள், கல்லூரிகள் அருகே, பூங்காக்களில் அமர்ந்திருக்கும் ஜோடிகளை போலீசார் விரட்டி, விரட்டி பிடித்து வருகின்றனர்.
அவர்களிடம் விசாரணை செய்து, காதல் ஜோடிகளாக இருந்தால், தோப்புகரணம் போடச் செய்து எச்சரித்து அனுப்பு இருக்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு முதல்வராக கோராக்பூர் மடாபதிபதியும், எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றுள்ளார்.
தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது பசுவதை தடுத்தல், பசு கடத்தல், சட்டவிரோத இறைச்சி கடைகளை மூடுதல் ஆகியவற்றை முதல்வர் ஆதித்யநாத்செயல்படுத்திவிட்டார்.
அடுத்தபடியாக ‘லவ் ஜிகாத்’தை ஒழிக்கும் வாக்குறுதியை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதற்காக ‘ஆன்ட்டி ரோமியோ’ போலீஸ் படையை அமைத்து காதலர்களை குறிவைத்து போலீசார் நேற்று முன் தினம் பிடித்து வருகின்றனர்.
கல்லூரி அருகே நிற்கும் ஜோடிகள், ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், பொது இடங்களில் ஜோடியாக இருப்பவர்களை போலீசார் குறி வைத்து பிடித்து வருகின்றனர். லக்னோவில் மட்டுமே நேற்று முன்தினம் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீரட் நகரில் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் ஜோடியாக நிற்கும் கல்லூரி,பள்ளி, மாணவ, மாணவிகளைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அவர்களை எச்சரிக்கை செய்யும் போலீசார், தோப்புக்கரணம் போடச் சொல்லி அனுப்புகிறார்கள்.
இது குறித்து மாநில போலீஸ் டிஜிபி ஜாவித் அகமது கூறுகையில், “ பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகஆன்ட்டி ரோமியோ படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படையில், ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், 2 போலீசார் இருப்பார்கள். ஒவ்வொரு நிலையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதியில் இதுபோல் 3 படைகள் நிறுத்தப்படுவார்கள்.
பள்ளிகள், கல்லூரிகளில் அதிகமாக நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பெண்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்கும் வகையில் கண்காணித்து, சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்துவார்கள். இதில் எந்த ஆண்களும், பெண்களும் போலீசாரால் கொடுமைப்படுத்தப்படவில்லை. அதேசமயம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார்.