ராம நவமி : அயோத்தியில் ராமரின் நெற்றியில் நேரடியாக சூரிய ஒளி விழுந்த அரிய நிகழ்வு..

By Ramya sFirst Published Apr 17, 2024, 12:13 PM IST
Highlights

அயோத்தியில் பால ராமருக்கு ‘சூரிய அபிஷேகம்’ அல்லது ‘சூரிய திலகம்’ என்ற அரிய நிகழ்வு நடைபெற்றது.

ராம நவமி என்பது விஷ்ணுவின் அவதாரமான ராமரின் பிறந்த நாளை குறிக்கும் பண்டிகையாகும். சைத்ரா மாதத்தின் 9-வது நாளில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு, ராம நவமி ஏப்ரல் 17, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. நவமி திதி ஏப்ரல் 16 அன்று மதியம் 01:23 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 17 அன்று மாலை 03:14 மணிக்கு முடிவடைகிறது.

இந்த நிலையில் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலில் இன்று ராம நவமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அயோத்தியில் பால ராமருக்கு ‘சூரிய அபிஷேகம்’ அல்லது ‘சூரிய திலகம்’ என்ற அரிய நிகழ்வு நடைபெற்றது. மதியம் 12:00 முதல் 12:05 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் ராமர் மீது விழுந்தது. ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் விழுந்த இந்த அரிய நிகழ்வை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

இதற்காக ரூர்கி ஐஐடி விஞ்ஞானிகள் ஒரு பிரத்யேக கருவியை வடிவமைத்தது. இதன் மூலம் சூரியக் கதிர்கள் ராமரின் நெற்றியில் பிரகாசித்தது. சுமார் நான்கு நிமிடங்களுக்கு 75 மி.மீ வரை வட்ட வடிவில் திலகம் போல பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி விழுந்தது. பின்னர் ராமருக்கு ஆரத்தி மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

இதனிடையே ஏப்ரல் 19ஆம் தேதிக்கு பிறகு குழந்தை ராமரை தரிசனம் செய்ய சிறப்பு விருந்தினர்கள் அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏப்ரல் 16 மற்றும் 18 க்கு இடையில் ராமரின் தரிசனம் மற்றும் ஆரத்திக்கான அனைத்து சிறப்பு பாஸ் முன்பதிவுகளையும் கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ராமர் கோவிலுக்குள் நுழைய மற்ற பக்தர்கள் செல்லும் பாதையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அது என்ன சூரிய திலகம்? அயோத்தி கோயிலில் நடக்கும் அரிய நிகழ்வின் பின்னணியில் உள்ள அறிவியல்..

ராம நவமியை முன்னிட்டு ராமர் கோயில் எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று ராமர் கோயில் தரிசனத்தின் போது ஏற்படும் இடையூறு மற்றும் நேர விரயத்தைத் தவிர்க்க, பக்தர்கள் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ராமர் கோயிலின் சூரிய திலகம் நிகழ்வு அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ராமர் கோவில் ராம நவமி கொண்டாட்டங்களை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

 

click me!