மக்களவைத் தேர்தல் 2024: திருவனந்தபுரத்தில் சசி தரூருக்கு எதிராக ராஜீவ் சந்திரசேகரை பாஜக களமிறக்கியது ஏன்?

By Manikanda Prabu  |  First Published Mar 8, 2024, 5:17 PM IST

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக ராஜீவ் சந்திரசேகரை பாஜக களமிறக்கியுள்ளது


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜகவை பொறுத்தவரை 195 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சராக இருந்த ராஜீவ் சந்திரசேகரை பாஜக களமிறக்கியுள்ளது.

கவனம் ஈர்க்கும் திருவனந்தபுரம் தொகுதி

Tap to resize

Latest Videos


திருவனந்தபுரம் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் உள்ளார். எதிர்வரவுள்ள தேர்தலிலும் அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. பாஜக வேட்பாளராக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதிக்கான வேட்பாளராக பன்யன் ரவீந்திரனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி முன்னிறுத்தியுள்ளது.

இதனால், மும்முனை போட்டி நிலவும் திருவனந்தபுரம் தொகுதி, இந்த தேர்தலில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து திருவனந்தபுரம் எம்.பி.யாக இருப்பவர் சசி தரூர். 2005ஆம் ஆண்டில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர் பன்யன் ரவீந்திரன். அவர்தான் தற்போதைய இடது முன்னணியின் வேட்பாளர். அதற்கு முன்பு காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் மாறி மாறி இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

ராஜீவ் சந்திரசேகர் vs சசி தரூர்


இந்த பின்னணியில், பாஜக சார்பில் தற்போது ராஜீவ் சந்திரசேகர் களமிறக்கப்பட்டுள்ளதால், சசி தரூருக்கு இந்த தேர்தல் சவால் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. ராஜீவ் சந்திரசேகரை முன்னிறுத்துவதற்கான பாஜகவின் முடிவானது, தேர்தல் அரசியலில் வரலாற்று ரீதியாக தடைகளை எதிர்கொண்டுள்ள தென் மாநிலமான கேரளாவில் தனது இருப்பை உருவாக்குவதற்கான பாஜகவின் முயற்சியாக பார்க்கப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சந்திரசேகரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம், நிலவும் அரசியல் சூழல்களுக்கு சவால் விடுவதற்கும், முன்பு தேர்தல் எதிர்ப்பைச் சந்தித்த பகுதிகளில் அதன் தடத்தை விரிவுபடுத்துவதற்கும் பாஜக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக கூறுகிறார்கள்.

 

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை 370 இடங்களில் வெற்றி பெற அக்கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த வகையில், திருவனந்தபுரம் தொகுதியில் ராஜீவ் சந்திரசேகரை முன்னிறுத்துவதன் மூலம், அரசியல் அரங்கில் சசி தரூரின் அந்தஸ்தைப் பெறும் திறன் அவருக்கு இருப்பதாக பாஜக உறுதியாக நம்புகிறது.


பாஜக மிஷன் சவுத்


மத்திய அமைச்சராக இருக்கும் ராஜீவ் சந்திரசேகர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அவர், தனது முதல் மக்களவை தேர்தலை சந்திக்கிறார். அதேசமயம், சசி தரூர் தனது கடைசி தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. மக்களவையில் பாஜக சார்பில் கேரளாவுக்கு பிரதிநிதித்துவம் கிடையாத நிலையில், ராஜீவ் சந்திரசேகர் நம்பிக்கையளிப்பார் என அக்கட்சி எதிர்பார்க்கிறது. ஆனால், தோல்வியடைந்தால் மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் அவர் பெரும் பின்னடைவை சந்திப்பார்.

மறுபுறம், சசி தரூர் வெற்றி பெற்றால், தொகுதியில் தனது தனிப்பட்ட செல்வாக்கை அவர் நிலைநிறுத்திக் கொள்வார். ஒருவேளை தனது சொந்த தொகுதியில் அவர் தோல்வியடைந்தால், தேர்தல் அரசியலில் இருந்து அவர் விலகவும் வாய்ப்புள்ளாது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். திருச்சூர் வம்சாவளியை சேர்ந்தது ராஜீவ் சந்திரசேகரின் கும்பம். எனவே, திருவனந்தபுரம் தொகுதிக்கான தேர்தல் அரசியலில் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், தெற்கில் தனது இருப்பை வலுப்படுத்து முடியும் எனவும் பாஜக நம்புகிறது. இந்த யுக்தியின் ஒரு பகுதியாகவே அவரை திருவனந்தபுரம் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. அண்மையில் கேரள மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தில் பாஜகவுக்கு இரட்டை இலக்க பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற சூளுரைத்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

முக்கியமான போர் விமானத் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல்!

கடந்த 2009 தேர்தலில், சசி தரூர் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும், 2014 ஆம் ஆண்டில், பாஜக வேட்பாளர் ராஜகோபால் சசி தரூருக்கு கடுமையான சவாலாக இருந்தார். இதனால், அந்த தேர்தலில் அவர் 15,470 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். ஆனாலும், 2019 தேர்தலில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சசி தரூர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கும்மனம் ராஜசேகரன் சுமார் 3.16 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

ராஜீவ் சந்திரசேகர்


சந்திரசேகர் மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த பிறகு, சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1988ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனத்தில் தனது பணியை தொடங்கிய அவர், 1991 இல் இந்தியாவுக்குத் திரும்பி BPL குழுமத்தில் சேர்ந்தார். 1994 இல் BPL மொபைலை அவர் நிறுவினார். ஆனால், 2005 ஆம் ஆண்டில் BPL கம்யூனிகேஷன்ஸில் தன் வசம் இருந்த 64 சதவீத பங்குகளை Essar குழுமத்திற்கு 1.1 பில்லியன் டாலருக்கு ராஜீவ் சந்திரசேகர் விற்றது கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து, அதே ஆண்டில், அவர் 100 மில்லியன் டாலர் ஆரம்ப முதலீட்டில் ஜூபிடர் கேபிட்டலை நிறுவினார்.

2006 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு முதன்முறையாக ராஜீவ் சந்திரசேகர் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 இல், மூன்றாவது முறையாக ராஜ்யசபாவிற்கு மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் பாஜகவில் இருந்து தேர்வானார். மோடி அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தில் மத்திய இணையமைச்சரானார்.

சசி தரூர்


சசி தரூர் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் அமெரிக்காவின் மெட்ஃபோர்டில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் இராஜதந்திரப் பள்ளியில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். கூடுதலாக, அவர் சட்டம் மற்றும் இராஜதந்திரத்தில் முதுகலை; சர்வதேச உறவுகள் மற்றும் விவகாரங்களில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

1978 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகராலயத்தின் (யு.என்.எச்.சி.ஆர்) ஊழியராக தனது பணியைத் தொடங்கிய சசி தரூர், 2007ஆம் ஆண்டில் தனது துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, கேரளாவின் திருவனந்தபுரத்தில் தனது முதல் மக்களவைத் தேர்தலை சந்தித்த சசி தரூர், கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

click me!