உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ள முக்கியமான போர் விமானத் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது
இந்திய விமானப்படையின் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப, ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்துவதற்கான, நீண்டகால முன்மொழிவான மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை வடிவமைக்கும் (AMCA) திட்டத்துக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் ஆரம்ப வளர்ச்சி செலவு சுமார் ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ், போர் விமானத்தின் ஐந்து முன்மாதிரிகள் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏடிஏ) மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஆகியவற்றால் தனியார் ஆதரவுடன் கூட்டாக உருவாக்கப்படும்.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் உள்ளன. இந்திய விமானப்படை அதன் நீண்ட கால தேவையை கருத்தில் கொண்டு AMCA திட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டு பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய பிரதமர் மோடி!
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பன்முக, புதிய தலைமுறை ஹெலிகாப்டர்களான 34 துருவ் ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடலோரக் காவல்படைக்கு வாங்கவும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டரைத் தயாரிக்கும், அதில் ஒன்பது இந்தியக் கடலோரக் காவல்படைக்கு வழங்கப்படும். இந்திய ராணுவத்திற்கு 25 ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும். இரண்டு திட்டங்களும் ரூ.8,000 கோடி மதிப்புடையதாக இருக்கும் என்றும், உள்நாட்டுமயமாக்கலுக்கு ஊக்கமளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.