அகவிலைப்படி உயர்வு, குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு முதல் செயற்கை நுண்ணறிவுக்கான புதிய திட்டங்கள் வரை மத்திய அமைச்சரவையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் முக்கியமான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 5 முக்கிய முடிவுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிவித்தார். அதன்படி, அகவிலைப்படி உயர்வு, குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு முதல் செயற்கை நுண்ணறிவுக்கான புதிய திட்டங்கள் வரை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த முக்கிய முடிவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய விகிதம் ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகரித்து 50% என்று மாறும்.
மேலும் மத்திய அரசு போக்குவரத்து, கேன்டீன், டெபுடேஷன் போன்ற பல்வேறு கொடுப்பனவுகளையும் அரசாங்கம் 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. மேலும், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அடிப்படை ஊதியத்தில் 27 சதவீதம், 19 சதவீதம் மற்றும் 9 சதவீதத்தில் இருந்து முறையே 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது.
சிலிண்டர் மானியம் நீட்டிப்பு
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் ரூ.300 மானியம் அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 31, 2025 வரை இந்த திட்டத்தை பயனாளிகள் பெறலாம். இதற்கான மொத்த செலவு ரூ.12,000 கோடி என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சிலிண்டர் மானியம் பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.300 மானியம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு.. மகளிர் தினத்தில் குட்நியூஸ் சொன்ன பிரதமர் மோடி..
IndiaAI மிஷம் திட்டம்
செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரூ.10,371.92 கோடி பட்ஜெட்டில் 'IndiaAI மிஷன்' என்ற தலைப்பில் நாடு தழுவிய விரிவான முயற்சிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு AI வளர்ச்சியை முன்னேற்றுவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. "IndiaAI மிஷன் பொது மற்றும் தனியார் துறைகளில் மூலோபாய திட்டங்கள் மற்றும் கூட்டாண்மை மூலம் AI கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை :
சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) குவிண்டாலுக்கு ரூ.285 உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ₹5335 ஆக அதிகரித்துள்ளது.
உத்தர பூர்வா திட்டத்திற்கு ₹10,037 கோடி
வடகிழக்கு பிராந்தியத்தில் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்க ரூ.10,037 கோடி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 10 ஆண்டுகால திட்டமாகும். சுமார் 83,000 நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணிசமான எண்ணிக்கையிலான மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.