இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மனைவியும், கல்வியாளருமான சுதா மூர்த்தியை ராஜ்ய சபாவின் எம்.பியாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார்.
மாநிலங்களவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களை தவிர மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது குடியரசு தலைவரால் நேரடியாக மாநிலங்களவைக்கு நியமிக்கப்படலாம். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பு பங்களிப்பை வழங்கியவர்களுக்கு நியமன எம்பி பதவி வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மனைவியும், கல்வியாளருமான சுதா மூர்த்தியை ராஜ்ய சபாவின் எம்.பியாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார். இந்த தகவலை தனது X பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரின் பதிவில்” இந்தியக் குடியரசுத் தலைவர் சுதா மூர்த்தியை ராஜ்யசபாவுக்கு நியமித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூகப் பணி, பரோபகாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது. அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. ராஜ்யசபாவில் அவரது இருப்பு நமது 'பெண் சக்திக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும், இது நமது நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் -யை ராஜ்யசபாவிற்கு பரிந்துரை செய்து இருக்கிறார். சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா ஜியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது. ராஜ்யசபாவில் அவரது இடம் பெறுவது நமது 'நாரி சக்தி'க்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். இது… pic.twitter.com/dAOTyOoiEW
— Asianetnews Tamil (@AsianetNewsTM)யார் இந்த சுதா மூர்த்தி?
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி, ஒரு கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் என பன்முகங்களை கொண்டவர். 2006 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் அவருக்கு வழங்கப்பட்டது. குழந்தை வளர்ப்பு, நிதி திட்டமிடல் மற்றும் சேமிப்பு தொடர்பாக அவர் ஆற்றிய உரைகள் பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்துள்ளது.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவராக இருந்த அவர், பில் கேட்ஸ் அறக்கட்டளையின் பொது சுகாதார முயற்சிகளிலும் உறுப்பினராக உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கிளாசிக்கல் லைப்ரரியை சுதா மூர்த்தி நிறுவியுள்ளார்.
சுதா மூர்த்தி - நாராயண மூர்த்தி தம்பதிக்கு அக்ஷதா மற்றும் ரோஹன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மணந்தார். சுதா மூர்த்தி தனது ‘டாலர் பாஹு’ நாவலுக்காகவும் பிரபலமானவர். முதலில் கன்னடத்தில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவல் 2001 ஆம் ஆண்டில் ஜீ தொலைக்காட்சியில் நாடகத் தொடராக ஒளிபரப்பப்பட்டது. சுதா மூர்த்தி எழுதிய ‘ரூனா’ என்ற கதை மிகவும் பிரபலமானது. இந்த கதையை தழுவி மராத்தி திரைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது.