தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சி இறங்கு முகமாகவும், பாஜக தொடர்ந்து வளர்ச்சியும் அடைந்து வருகிறது
சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மிகவும் வலிமை வாய்ந்த கட்சியாக இருந்தது. ஆனால், அக்கட்சி தற்போது தொடர் தோல்விகளால் தத்தளித்து வருகிறது. பெரும்பாலான தலைவர்கள் மாற்றுக் கட்சிக்கு குறிப்பாக பாஜகவுக்கு சென்று விட்டனர். இதனை மீட்டெடுக்க அக்கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மறுபுறம், பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. ஜன சங்கத்தில் உதயமான அக்கட்சியின் வளர்ச்சி, தொடர்ந்து அதிகரித்து இன்று அசைக்க முடியாத ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இந்த பின்னணியில் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், கடந்த முறை வெற்றி பெற்றதை விட அதிக இடங்களில் அதாவது 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. அக்கட்சியை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஒருங்கிணைந்துள்ளன.
சுதந்திர இந்தியாவின் முதல் முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்து, ஆட்சியை ஜனதா கட்சியிடம் பறிகொடுத்தது. சுதந்திரத்துக்கு பிறகு 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் 45.0 சதவீதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 1977இல் 34.5 ஆக குறைந்திருந்தது.
அதன்ப்பிறகு, 1980 இல் நடந்த பொதுத் தேர்தலில், 42.69 சதவீத வாக்குகளை பெற்று, 374 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்து காங்கிரஸ். இந்திரா காந்தி பிரதமரானார். 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது மகன் ராஜீவ் காந்தி முதல்முறையாக அரசியல் களம் கண்டார். அவரது கவர்ச்சியான தலைமையில் காங்கிரஸ் கட்சி அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில், 48.12 சதவீத வாக்குகளை பெற்று, 414 இடங்களில் வென்றது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு சதவீதத்திலேயே அதுதான் மிக அதிகம், இதுவரை வேறு எந்த கட்சிக்கும் அதுபோன்ற வாக்கு சதவீதம் கிடைக்கவில்லை. சுதந்திர இந்தியாவில் இத்தகைய பெரும்பான்மை பலம் வேறு எந்த பிரதமருக்கும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அவரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ராஜீவ் காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய வி.பி.சிங், தனது தலைமையில் ஜனதா தளம் கட்சியை உருவாக்கினார். அந்த கட்சி 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் 197 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.
மக்களவைத் தேர்தல் 2024: தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன?
ஆனால், உட்கட்சி பூசலால் வி.பி.சிங் ஆட்சியை இழக்க, காங்கிரஸ் உதவியுடன் சந்திரசேகர் பிரதமரானார். 1991aஅம் ஆண்டில் சந்திரசேகர் அரசு கவிழ்ந்ததால், மீண்டும் பொதுத் தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையின் பின்னால், சர்வதேச சதி உள்ளதாகவும், இந்தியாவின் பல மூத்த அரசியல் தலைவர்களுக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அவை எதுவும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து நடந்த 1991ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், 35.66 சதவீத வாக்குகள் பெற்று, 244 இடங்களில் வென்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தது. நரசிம்ம ராவ் பிரதமரானார். அப்போது நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
அதன்பிறகு, 1996 பொதுத் தேர்தலில் 28.80 சதவீத வாக்குகளை பெற்று, 140 இடங்களில் மட்டும் வென்ற காங்கிரஸ், ஆட்சியை இழந்தது. பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமரானார். ஆனால், பெரும்பான்மை இல்லாமல் வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்ததால், தேவ கவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியை பிடித்தது. அதற்கு, வெளியில் இருந்து காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.
ஆனால், 1997இல் தேவகவுடா ஆட்சிக்கான ஆதரவை காங்கிரஸ் வாபஸ் வாங்கியதால், ஐ.கே.குஜரால் தலைமையிலான ஆட்சி அமைந்தது. ஓராண்டு நீடித்த இந்த ஆட்சிக்கான ஆதரவையும் காங்கிரஸ் திரும்பப் பெற்றதால், 1998இல் மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், 26.14 சதவீத வாக்குகளைப் பெற்று, 141 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வென்றது. 1991 தேர்தலை ஒப்பிடும் போது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் கூடுதலாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. அதேசமயம், அக்கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்திருந்தது.
இதனால், இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த பாஜகவின் வாஜ்பாய் அரசு 1999இல் மீண்டும் கவிழ்ந்தது. இதனால், 1999இல் மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதனிடையே, காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸில் இருந்து வெளியேறிய சரத் பவார், தனிக் கட்சியை ஆரம்பித்தார். தொடர்ந்து, 1999 பொதுத் தேர்தலில், 28.30 சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ், 114 இடங்களில் வென்றது. இதனால், வாஜ்பாய் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தது.
அதன்பிறகு, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 26.70 சதவீத வாக்குகள் பெற்று, 145 இடங்களில் காங்கிரஸ் வென்றது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. மன்மோகன் சிங் பிரதமரானார். தொடர்ந்து, 2009 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 28.55 சதவீத வாக்குகள் பெற்று, 206 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சியமைந்தது. மீண்டும் மன்மோகன் சிங் பிரதமரானார்.
ராகுல் காந்தியின் நியாய யாத்திரை இன்று நிறைவு!
ஆனால், தனது இரண்டாவது ஆட்சிகாலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 19.31 சதவீத வாக்குகளை பெற்றது. இது அக்கட்சியின் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாகும். அந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை பிடித்தது.
அதன்பிறகு, நாடு முழுவதும் வீசிய மோடி அலையால், 2019 தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றது. மோடி மீண்டும் பிரதமரானார். அந்த தேர்தலில் 19.49 சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 37.36 சதவீத வாக்குகளை பெற்று 303 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த இடைப்பட்ட காலத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், பாஜகவின் அகலமும் ஆழமும் நமக்கு நன்றாக புரியும். அக்கட்சி போட்டியிட்ட முதல் பொதுத் தேர்தலில், அதாவது 1984ஆம் ஆண்டில் சுமார் 7.4 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 2019 தேர்தலில் 37.36ஆக அதிகரித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 44.84 சதவீத வாக்குகளை பெற்றது. 2019 தேர்தலில் பாஜக 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதி அல்லது பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
எதிர்வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலிலும் மீண்டு வெற்றி பெறுவோம் என பாஜகவினர் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கின்றனர். பாஜக இதுபோன்ற ஒரு ஆதிக்கக் கட்சியாக உருவெடுத்ததற்கு, காங்கிரஸ் மற்றும் பல பிராந்தியக் கட்சிகளின் வீழ்ச்ச்சி, காங்கிரஸ் தனது கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்தாது, காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத கட்சிகள் நிலையான ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தது என பல காரணங்கள் உள்ளன.
அதேசமயம், பாஜகவின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அதன் புதுமையான அரசியல் உத்தியும், மாறிவரும் காலத்துக்கும், மாறிவரும் இந்திய வாக்காளருக்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறனும் ஆகும். மேலும், சித்தாந்த ரீதியாகவும், இந்துத்துவ அடித்தளத்துடனும் அக்கட்சி தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
பிரதமர் மோடியின் பிம்பமும் அக்கட்சியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம். 1950 களில் நேருவின் புகழால் காங்கிரஸின் ஆதிக்கம் இருந்ததைப் போலவே இன்று பாஜகவின் ஆதிக்கத்துக்கு மோடியின் புகழும் ஓரளவுக்குக் காரணம். நேரு காலத்தில், நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்வியை காங்கிரஸ் எதிர்கொண்டது. பாஜகவும் விரைவில் இந்த கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேசமயம், தனது இழந்த பலத்தை மீட்டெடுக்க கடுமையான முயற்சிகளை காங்கிரஸ் செய்ய வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.