மக்களவைத் தேர்தல் 2024: தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன?

By Manikanda Prabu  |  First Published Mar 17, 2024, 11:11 AM IST

மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன?


தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரச்சாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் தொகுப்பே தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் (Model Code Of Conduct) எனப்படுகின்றன. வாக்கெடுப்பு செயல்முறையை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுத்து, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். பேச்சுக்கள், வாக்குப்பதிவு நாள், வாக்குச் சாவடிகள், இலாகாக்கள், தேர்தல் அறிக்கைகளின் உள்ளடக்கம், ஊர்வலங்கள் மற்றும் பொது நடத்தை தொடர்பான பிரச்சினைகள் வரை இந்த விதிகள் நீள்கின்றன.

ராகுல் காந்தியின் நியாய யாத்திரை இன்று நிறைவு!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு என்ன நடக்கும்?


** தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர்கள் நிதி மானியங்களை அறிவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது
** அரசால் புதிய திட்டங்களை தொடங்கவோ, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவோ முடியாது
** சாலைகள் அமைத்தல் அல்லது குடிநீர் வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான வாக்குறுதிகளை அதிகாரிகளால் வழங்க முடியாது
** வாக்காளர்களை பாதிக்கக்கூடிய அரசு அல்லது பொது நிறுவனங்களில் தற்காலிக நியமனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன
** அமைச்சர்கள் அல்லது வேட்பாளர்கள் விருப்ப நிதியிலிருந்து மானியங்கள் அல்லது கொடுப்பனவுகளை வழங்க முடியாது
** அரசாங்க போக்குவரத்து, வாகனங்கள், இயந்திரங்கள், பாதுகாப்புப் பணியாளர்களை தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
** தேர்தல் பங்கேற்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொது இடங்களில் கூடுவதற்கு, பிரசாரம் மேற்கொள்ள பாரபட்சமின்றி சமமாக நகராட்சிகள் அனுமதி அளிக்க வேண்டும்.
** ஓய்வு இல்லங்கள் உள்ளிட்ட அரசு பங்களாக்களையோ, அரசு வசதிகளையோ எந்த அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது
** ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு அதிகாரபூர்வ வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
** மத்திய, மாநில அரசுகளால் புதிய திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியா
** அனுமதி பெறாமல் கட்சி கொடி, பேனர்களை வைக்க முடியாது
** பேரணி, ஊர்வலம், கூட்டத்தை நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்
** சாதி மற்றும் வகுப்புவாத உணர்வுகளை பயன்படுத்தி வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்துதல், வதந்திகளை பரப்புதல், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது அல்லது மிரட்டுவது போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
** வழிபாட்டு இடங்கள், பதற்றமான இடங்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் கூட்டம் நடத்தக் கூடாது
** அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம், பரிசுப்பொருள் அளிக்கக் கூடாது
** 50,000 ரூபாய்க்கு மேல், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது
** மதம், மொழி, இனம் சார்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரலாறு


கேரளாவில் 1960ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதுதான் மாதிரி நடத்தை விதிகள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 1962 மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. 1991 மக்களவை தேர்தலின் போது, தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாலும், ஊழல் குறித்த கவலைகள் காரணமாகவும், நடத்தை விதிமுறைகளை இன்னும் கடுமையாக அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து விதிகளை வகுத்து அமல்படுத்தியது.

மக்களவைத் தேர்தல் 2024 தேதி முழு அட்டவணை


மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசம் 2, அசாம் 5, பிகார் 4, சத்தீஸ்கர் 1, மத்தியப் பிரதேசம் 6, மகாராஷ்டிரம் 5, மணிப்பூர் 2, மேகாலயா 2, மிசோரம் 1, நாகலாந்து 1, ராஜஸ்தான் 12, சிக்கிம் 1, தமிழ்நாடு 39, திரிபுரா 1, உத்திரப் பிரதேசம் 8, உத்தர்கண்ட் 5, மேற்கு வங்கம் 3, அந்தமான் நிகோபார் தீவுகள் 1, ஜம்மு-காஷ்மீர் 1, லட்சத்தீவு 1, புதுச்சேரி 1 ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, அசாம் 5, பிகார் 5, சத்தீஸ்கர் 3, கர்நாடகம் 14, கேரளம் 20, மத்தியப் பிரதேசம் 7, மகாராஷ்டிரம் 8, மணிப்பூர் 1, ராஜஸ்தான் 13, திரிபுரா 1, உத்திரப் பிரதேசம் 8,மேற்கு வங்கம் 3, ஜம்மு-காஷ்மீர் 1 ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மூன்றாம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு மே 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி அசாம் 4, பிகார் 5, சத்தீஸ்கர் 7, கோவா 2, குஜராத் 26, கர்நாடகம் 14, மத்தியப் பிரதேசம் 8, மகாராஷ்டிரம் 11, உத்திரப் பிரதேசம் 10, மேற்கு வங்கம் 4, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ 2, ஜம்மு-காஷ்மீர் 1 ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

நான்காம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, ஆந்திரம் 25, பிகார் 5,ஜார்க்கண்ட் 4, மத்தியப் பிரதேசம் 8, மகாராஷ்டிரம் 11, ஒடிசா 4, தெலங்கானா 17, உத்திரப் பிரதேசம் 13, மேற்கு வங்கம் 8, ஜம்மு-காஷ்மீர் 1 ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஐந்தாம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ஆம் தேதி தேர்ல் நடைபெறுகிறது. அதன்படி, பிகார் 5,ஜார்க்கண்ட் 3, மகாராஷ்டிரம் 13, ஒடிசா 5, உத்திரப் பிரதேசம் 14, மேற்கு வங்கம் 7, ஜம்மு-காஷ்மீர் 1, லடாக் 1 ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, பிகார் 8, ஹரியாணா 10, ஜார்க்கண்ட் 4, ஒடிசா 6, உத்திரப் பிரதேசம் 14, மேற்கு வங்கம் 8, டெல்லி 7 ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

எழாவது மற்றும் கடைசி கட்டமாக ஜூன் 1ஆம் தேதி 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, பிகார் 8, ஹிமாச்சல் 4, ஜார்க்கண்ட் 3, ஒடிசா 6, பஞ்சாப் 13, உத்திரப் பிரதேசம் 13, மேற்கு வங்கம் 9, சண்டீகர் 1 ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

click me!