ராகுல் காந்தியின் நியாய யாத்திரை இன்று நிறைவு!

By Manikanda Prabu  |  First Published Mar 17, 2024, 10:16 AM IST

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மும்பையில் இன்று நிறைவடையவுள்ளது


காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் நியாய யாத்ரா எனும் பெயரில், பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில் கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று ராகுல் காந்தி தனது அடுத்த யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையானது நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்பட்டது.

Tap to resize

Latest Videos

மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாம், நாகாலாந்து, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரையானது 63 நாட்கள் நடைபெற்றுள்ளது.

Lok Sabha Elections 2024: மாநிலம், தொகுதி வாரியாக மக்களவைத் தேர்தல் தேதிகள்... முழு விவரம் இதோ...

மும்பையில் மணி பவன் முதல் ஆகஸ்டு கிராந்தி மைதானம் வரை ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் இறுதி நடைபயணம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் யாத்திரை நிறைவடைகிறது. மாலை 5 மணி அளவில் மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நிறைவு விழா நடைபெற உள்ளது. அதில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நிறைவு  விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். அவர் தவிர, உத்தவ் தாக்கரே, சரத் பவார், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா, சம்பய் சோரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். 

click me!