சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லாவை எதிர்த்து கோடிகுன்னில் சுரேஷ் போட்டியிட உள்ள நிலையில், அவர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மக்களவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும் செய்துவைக்கப்பட்டது. பின்னர் புதிய உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் சபாநாயகரை தேர்தெடுக்க இந்தியா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு கோரி இந்தியா கூட்டணியினரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு எட்டப்படாததால் தேர்தல் வைத்து சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்திய வரலாற்றிலேயே மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது இதுவே முதன்முறை ஆகும். வருகிற ஜூன் 26-ந் தேதி இதற்கான தேர்தல் நடக்க இருக்கிறது.
இதையும் படியுங்கள்... சபாநாயகர் தேர்தல்.. மீண்டும் ஓம் பிர்லாவை களமிறக்கிய என்.டி.ஏ... கே. சுரேஷை களமிறக்கிய இந்தியா கூட்டணி..
யார் இந்த கோடிகுன்னில் சுரேஷ்?
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி கோடிகுன்னில் சுரேஷை களமிறக்கி உள்ளது. கே.சுரேஷ், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோடிக்குன்னில் எனும் பகுதியில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் குஞ்சன், தாய் பெயர் தங்கம்மா. கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தாலும், சட்டக் கல்லூரியில் படித்திருக்கிறார் சுரேஷ்.
இவர் கடந்த 1989-ம் ஆண்டு முதன்முறையாக மக்களவை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் 1991, 1996 மற்றும் 1999 ஆகிய மூன்று முறையும் அடூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை எம்பி ஆனார் சுரேஷ், பின்னர் 2009, 2014, 2019 மற்றும் 2024-ல் நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றிபெற்று எம்.பி ஆன சுரேஷ், மக்களவையில் நீண்ட காலம் எம்.பி ஆக உள்ளவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார். இவர் சுமார் 29 ஆண்டுகள் எம்.பி ஆக பணியாற்றி இருக்கிறார்.
இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாவேலிகரா தொகுதியில் போட்டியிட்டார். அங்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமியூனிஸ்ட் கட்சி வேட்பாளரை சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டார் சுரேஷ். அவர் இந்த சபாநயகர் தேர்தலில் களமிறங்கி உள்ளது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதில் அவர் ஓம் பிர்லாவை வீழ்த்தி சபாநாயகர் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது! பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்களுக்கு நவீன் பட்நாயக் உத்தரவு!