நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தலைவர்கள் சிலைகள் அகற்றப்படுவது குறித்து மக்களவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது
நாடாளுமன்ற வளாகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள், முதுபெரும் தலைவர்களுக்கு என ஏராளமான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, நடாளுமன்ற வளாகத்தில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் அமைந்துள்ள மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
“சத்ரபதி சிவாஜி, மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது கொடுமையான மற்றும் அவமானகரமான செயல்.” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகள் அழகுபடுத்தப்படுகிறதா? அகற்றப்படுகிறதா? எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
undefined
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தலைவர்கள் சிலைகள் அகற்றப்படுவது குறித்து மக்களவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “புதிய நாடளுமன்ற கட்டிடம் கட்டப்பட்ட பின்னர், நாடாளுமன்ற வளாகத்தை அழகுபடுத்துவதற்கும், அதன் வளாகத்தை பிரமாண்டமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றும் வகையில், அதன் உயரிய கண்ணியத்திற்கு ஏற்ப ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை உயர்வு: யார் இந்த சுயேச்சை விஷால் பாட்டீல்?
நாடாளுமன்ற வளாகத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தலைசிறந்த தலைவர்களின் சிலைகள் உள்ளன. நமது தேசத்தின் சுதந்திரத்திலும், தேசத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக மறுமலர்ச்சியிலும், சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் ஜனநாயகப் பயணத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதிலும் இந்த மாபெரும் தலைவர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்த மகத்தான வீரர்கள், தங்கள் வாழ்க்கை, தத்துவம் மற்றும் பணி மூலம், நாட்டின் பழம்பெருமையை நிலைநிறுத்தி, சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தனர். நமது தேசத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு அச்சிலைகள் உத்வேகமளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்த சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளதால், பார்வையாளர்கள் இந்த சிலைகளை வசதியாக பார்க்க முடியவில்லை. இந்த காரணத்திற்காக, இந்த சிலைகள் அனைத்தும் நாடாளுமன்ற வளாகத்தில் பிரத்யேகமாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் (Prerana Sthal) மரியாதையுடன் நிறுவப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள், இந்த தலைசிறந்த தலைவர்களின் சிலைகளை எளிதில் பார்க்கும் வகையிலும், அவர்களின் வாழ்க்கை மற்றும் தத்துவத்தில் இருந்து உத்வேகம் பெறும் வகையிலும் இந்த இடம் (Prerana Sthal) உருவாக்கப்படுகிறது.
இந்த Prerana Sthal இடத்தில் நமது மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் குறித்து பார்வையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விரிவான தகவல்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மரியாதைக்குரிய இடத்தில் தலைவர்களுக்கு பார்வையாளர்கள் தங்கள் பணிவான அஞ்சலிகளையும் செலுத்தலாம்.
நாடாளுமன்ற வளாகம் மக்களவை சபாநாயகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதும், கடந்த காலங்களில் மக்களவை சபாநாயகரின் அனுமதியுடன் வளாகத்திற்குள் சிலைகள் மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எந்த ஒரு தலைவரின் சிலையும் அகற்றப்படவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்களின் சிலைகள் முறையாகவும் மரியாதையுடனும் நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டு வருகின்றன.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.