மக்களவைத் தேர்தல் 2024இன் முதற்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களில் சொத்தே இல்லாத அல்லது சொற்பமாக சொத்து வைத்திருக்கும் வேட்பாளர்கள் விவரம் தெரியவந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அடுத்தக்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நிதிநிலை குறித்து வியத்தகு தகவல்கள் வெளியாகி வருகின்றன. வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் அவர்களது சொத்து மதிப்பு குறித்து பட்டியலிட்டுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு மூன்று வேட்பாளர்களில் ஒருவர் கோடீஸ்வரர் என ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம் என்ற தனியார் தேர்தல் கண்காணிப்புக் குழு அண்மையில் கண்டறிந்துள்ளது. அதேசமயம், சில வேட்பாளர்கள் சொத்தே இல்லாமல் இருக்கின்றனர் அல்லது சொற்பமாக சொத்து வைத்திருக்கும் தகவலும் தெரியவந்துள்ளது.
அதன்படி, பூஜ்ஜிய சொத்து மதிப்பு கொண்ட முதல் 10 வேட்பாளர் குறித்த விவரம் பின்வருமாறு; மகாராஷ்டிர மாநிலம் ராம்டெக் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் அரவிந்த் சிவாஜி தண்டேகர் கிவின்சுகா, நாக்பூர் தொகுதியில் போட்டியிடும் தேஷ்ஜன்ஹித் கட்சியை சேர்ந்த வீரேந்திர சூரியவன்ஷி, தமிழ்நாட்டின் தென் சென்னையில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தேவேந்திரன், வேலூரில் சுயேச்சையாக போட்டியிடும் ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகிரியில் சுயேச்சையாக போட்டியிடும் ஆல்பர்ட் ஃப்ரான்சிஸ் சேவியர், அரோக்கணத்தில் போட்டியிடும் அனைத்து இந்திய ஜனநாயக மக்கள் கழகம் வேட்பாளர் விஜயன், விழுப்புரத்தில் சுயேச்சைகளாக போட்டியிடும் சத்தியராஜ், குணசேகரன், திருச்சியில் சுயேச்சையாக போட்டியிடும் அன்பின் அமுதன், திருநெல்வேலியில் சுயேச்சையாக போட்டியிடும் சுரேஷ் ஆகியோரின் தங்களது சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Loksabha Elections 2024 முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள்: சொத்து மதிப்பு என்ன?
அதேபோல், தூத்துக்குடியில் சுயேச்சையாக போட்டியிடும் பொன்ராஜ் என்பவர் தனது சொத்து மதிப்பு ரூ.320 என காட்டியுள்ளார். வட சென்னையில் SUCIC வேட்பாளர் செபஸ்டின் தனது சொத்து மதிப்பு ரூ.1500 என காட்டியுள்ளார்.
மேலும், ராம்டெக், வட சென்னை, ஆரணி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் முறையே கார்த்திக் ஜென்ட்லால்ஜி டோக், சூரிய முத்து, தாமோதரன், சதீஷ்குமார் ஆகியோர் தலா ரூ.500, ரூ.500, ரூ.1000, ரூ.2000 என தங்களது சொத்து மதிப்பு என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
திண்டுக்கலில் சுயேச்சைகளாக போட்டியிடும் சுரேஷ்குமார், பழனிசாமி ஆகியோர் தலா ரூ.2000, திருச்சியில் சுயேச்சையாக போட்டியிடும் கோவிந்தராசு ரூ.2000, தூத்துக்குடியில் சுயேச்சையாக போட்டியிடும் கிருஷ்ணனன் ரூ.3500 என தங்களது சொத்து மதிப்பாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.