பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சியமைப்பார்: ஜோசியக்காரர்கள் கணிப்பு!

By Manikanda Prabu  |  First Published Apr 10, 2024, 2:16 PM IST

பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சியமைப்பார் என கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜோசியக்காரர்கள் கணித்துள்ளனர்


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க வேண்டும் எனவும் பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், பாஜக வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன.

இந்த நிலையில், பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சியமைப்பார் என கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜோசியக்காரர்கள் கணித்துள்ளனர். உகாதி பண்டிகையையொட்டி எதிர்காலத்தை கணித்த கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட் மற்றும் தார்வாட் மாவட்டங்களை சேர்ந்த புகழ்பெற்ற ஜோசியக்காரர்கள், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று கணித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

பாகல்கோட் மாவட்டம் குலேட்குடா நகரில் உள்ள மார்வாடி பாகீச்சா பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எதிர்காலத்தை கணித்து வரும் இலலா பாரம்பரியத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கோபி, மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி பெறுவார் என கணித்துள்ளார்.

பருவமழை, பயிர் வளர்ச்சி குறித்து கணித்த அவர், துவரம்பருப்பு, முத்து தினை பயிர்கள் பூச்சிகளால் பாதிக்கப்படும் எனவும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பாரம்பரிய ஆடை தயாரிப்பாளர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்வர் எனவும் கணித்துள்ளார்.

இதனிடையே, தார்வாட் மாவட்டத்தில் உள்ள பெடகேரி நகருக்கு அருகில் உள்ள ஹனுமானகோப்பா கிராமத்தை சேர்ந்த பிரபல பொம்மை கணிப்பு ஜோசியக்காரர், மத்திய, மாநில அரசியலில் எந்த மாற்றமும் இருக்காது என கணித்துள்ளார். இது பிரதமர் மோடி 3ஆவது முறையாக ஆட்சியமைப்பார் என்பதை குறிக்கும் வகையில் உள்ளது. பாரம்பரியமிக்க பொம்மை கணிப்பு ஜோதிடம், 1936ஆம் ஆண்டு முதல் இப்பகுதி மக்களால் பின்பற்றப்படுகிறது.

அருணாச்சலப் பிரதேச எல்லையோரம் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டம்!

கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழக்கும் என்றும், எதிர்காலத்தில் அம்மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வரும் என்றும் இதற்கு முன்பு பாரம்பரியமிக்க பொம்மை கணிப்பு ஜோதிடம் கணித்திருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

உகாதி பண்டிகைக்கு முந்தைய பௌர்ணமி நாளில் பொம்மலாட்டம் மேற்கொள்ளப்படும். உள்ளூர் ஓடையின் கரையில் நான்கு திசைகளிலும் பொம்மைகள் நிறுவப்படும். அடுத்த நாள் குறிப்பிட்ட திசைகளில் பொம்மலாட்டங்களை பகுப்பாய்வு செய்து ஜோசியக்காரர்கள் கணித்து சொல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!