மக்களவைத் தேர்தல் முடிவுகளில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் கிங் மேக்கர்களாக மாறியுள்ளனர்
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு முடிவடைந்திருக்கிறது. அதில், பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் 3ஆவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வந்தது. அதேசமயம், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.
மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என பாஜகவினர் மார்தட்டி வந்தனர். 370 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனவும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைத்து மொத்தமாக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் எனவும் பாஜகவினர் கூறி வந்தனர்.
undefined
அதேபோல், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜகவுக்கு சாதகமாக இருந்தன. பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்திருந்தன. அதேபோல், இந்தியா கூட்டணி 145 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் பெரும்பாலான கருத்து கணிப்புகள் கணித்திருந்தன. ஆனால், இந்த கருத்துக்கணிப்புகளுக்கு நேர் எதிராக தேர்தல் முடிவுகள் வரும் என இந்தியா கூட்டணி நம்பிக்கை தெரிவித்தது.
அதன்படியே, தேர்தல் முடிவுகளும் வந்து கொண்டிருக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சியோ அல்லாது கூட்டணியோ ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலவரப்படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவால் மத்தியில் ஆட்சியமைக்க முடியும். அதேபோல், பாஜகவில் உள்ள கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து காங்கிரஸ் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியும்.
மக்களவை தேர்தலில் மாஸ்டர் ஸ்ட்ரோக் கொடுத்த அந்த ஐந்த முக்கிய திருப்பங்கள்!
இந்நிலையில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணிக்குப் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் துருப்பு சீட்டாக மாறியுள்ளது. ஆனால், இந்த இரண்டு கட்சிகளுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன. இவர்களை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணியும், தக்க வைத்துக் கொள்ள பாஜகவும் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வரை அதுபோன்று யாருடனும் பேசவில்லை என செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் மனது வைத்தால்தான் பாஜக ஆட்சியமைத்து மோடி பிரதமர் ஆக முடியும் என்பதால், அவர்கள் இருவரும் கிங் மேக்கர்களாக மாறியுள்ளனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என சந்திரபாபு நாயுடுவிடமும், துணை பிரதமர் பதவி தருகிறோம் என நிதிஷ்குமாரிடமும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தையும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் முதல்வராக பதவியேற்கவுள்ளார். மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கணிசமான வாக்குகளைப் பெற்று மொத்தம் உள்ள 25 இடங்களில் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மொத்தம் உள்ள 30 இடங்களில் 13 இடங்கள் முன்னிலையில் உள்ளது. முன்னதாக, இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் கடைசி நேரத்தில் பாஜகவுக்கு தாவினார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.