
மகாராஷ்டிராவில் கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் குறித்து ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறித்துப் பார்வையிட்ட போது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு ஆதார் எண், பலருக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
போலி பயனாளர்களைத் தடுப்பதற்காகவம், போலி கணக்கின் பேரில் விவசாயக் கடன் தள்ளுபடி பெறுவோரைக் கண்டறிவதற்காகவும் மாநில அரசு சில நடவடிக்கைக்ளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாக, விவசாயக் கடன் பெற தகுதியான விவசாயிகள், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியது. மேலும், அவ்வாறு பதிவு செய்யும் போது, ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதை அடுத்து, ஆன்லைனில் பதிவு செய்த பயனாளர்களிடன் விவரங்களை கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சரி பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்தப் பட்டியலில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒரே ஒரு ஆதார் எண்ணே வழங்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து மகாராஷ்டிர மாநில கூட்டுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் விவரித்தபோது, ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அதன் மூலம் கடன் தள்ளுபடி கோரிய போலி பயனாளர்களைக் கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்தோம். இதனால் பட்டியல் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் பல பேருக்கு ஒரே ஒரு ஆதார் எண் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், அவர்களின் முகவரிகளை எப்படி சரி பார்ப்பது என்று எங்களுக்குப் புரியவில்லை.
இந்தப் பட்டியலைக் கொண்டு, பணியாளர்களை அமர்த்தி, குறிப்பிட்ட விவரங்களைக் கொண்டு வீடுவீடாகச் சென்று சரிபார்த்தால், அதற்கு வாரக் கணக்கில் அவகாசம் தேவை. நாட்கள் ஆகும். ஆனால், விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் வேறு தாமதமாகி வருகிறது. ஏற்கெனவே இது குறித்து வேளாண் துறை காலதாமதமாகி வருவதாக குற்றம் சுமத்தி வருகிறது. இது போன்ற சிக்கலாம் மேலும் காலதாமதம் ஏற்படும் என்று கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், வங்கிகளில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் விசாரித்துப் பார்த்த போது, விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடன் தொகைக்கும், விவசாயிகளின் நில அளவுகளுக்கும் தொடர்பு இல்லாமல் உள்ளதாம். எனவேதான் மாநில அரசு பயிர்க் காப்பீடு விவகாரத்தில், ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்ததாகவும், ஆன்னால் ஒரே ஆதார் எண், பலருக்கும் வழங்கப்பட்டுள்ளதால், கடன் தள்ளுபடி திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் மாநில பாஜக., அரசு குழம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.