
புது தில்லி:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஸோதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் குறித்துக் கூறினார். ஆனால், தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து எதுவும் செய்தி இல்லை. இடைத் தேர்தல்கள் எதுவும் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஜோதி கூறினார்.
தற்போதைய குஜராத் மாநில சட்டப் பேரவையின் ஆயுள் காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. முன்னதாக ஹிமாசலப் பிரதேச தேர்தல் தேதியை ஒட்டியே குஜராத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அவர் அறிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அக்ஸல் குமார் ஜோதி மற்ற இரு தேர்தல் ஆணையர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்து தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், தற்போது குஜராத் சட்டப்பேரவை தேர்தல் குறித்து மட்டுமே இரண்டு தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசித்து, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பிற மாநிலங்களில் சில இடைத்தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது. ஆனால் அவை பற்றி எதுவும் தற்பொழுது ஆலோசிக்கப்படவில்லை. அவற்றுக்கான தேதிகள் குறித்து ஆலோசனை நடைபெறும் போது, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார் ஜோதி.