வரும் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் உட்பட பாஜக ஆளும் சில மாநிலங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
வரும் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் உட்பட பாஜக ஆளும் சில மாநிலங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட நாடு முழுவதும் 7,000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அன்றைய தினம் கோயில் கருவறையில் ராம் லல்லா (ராமரின் குழந்தை வடிவம்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, இந்த வரலாற்று தருணத்தை குறிக்கும் வகையில் தீபங்களை ஏற்றி வைக்குமாறு பிரதமர் மக்களை ஏற்கனவே வலியுறுத்தி உள்ளார். மேலும் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளை பாஜக ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்வின் புனிதத்தைப் பாதுகாக்க, பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனவரி 22, அன்று மதுபான விற்பனையைத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்
ஜனவரி 22 ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதித்த முதல் மாநிலம் சத்தீஸ்கர் ஆகும், அங்கு பாஜக கடந்த மாதம் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் விஷ்ணு தேவ் சாய் கடந்த வாரம் தனது முடிவை அறிவித்தார். "ஜனவரி 22 ஆம் தேதி மாநிலம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது," என்று அவர் கூறினார். இதன் அடிப்படையில், சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபான விற்பனை தடைசெய்யப்படுவது மட்டுமல்லாமல், பப்கள், உணவகங்கள் மற்றும் உயர்தர கிளப்புகளிலும் மதுபான விற்பனை தடை செய்யப்படும்.
மாநிலத்தின் அரிசி ஆலைகள் சங்கம் கொண்டாட்டங்களுக்காக 300 மெட்ரிக் டன் நறுமண அரிசியை அயோத்திக்கு அனுப்பியுள்ளதாகவும், மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும் உத்தரபிரதேசத்திற்கு காய்கறிகளை அனுப்புவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
அசாம்
சத்தீஸ்கரை தொடர்ந்து அசாம் மாநிலம் ஜனவரி 22-ம் தேதி அன்று மதுபான விற்பனைக்கு தடை விதித்தது. இதுகுறித்து அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த் மல்லா பருவா கூறியதாவது: ராமர் கோவில் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில், ஜனவரி 22ம் தேதி அன்று மாநிலத்தி மதுபான விற்பனைக்கு தடை விதிக்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வடகிழக்கு மாநிலத்தில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
உத்தரப்பிரதேசம்
ஜனவரி 22 ஆம் தேதி, உத்தரபிரதேசத்தில், ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இந்த நாள் தேசிய விழாவாக கொண்டாடப்படும் என்று கூறிய அவர், ஜனவரி 22ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். யோகி ஆதித்யநாத், ஜனவரி 9-ம் தேதி அயோத்திக்கு வருகை தரும் போது மது விற்பனை தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், அயோத்தியில் தூய்மைக்கான 'கும்பம் மாதிரி'யை அமல்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். "தர்ம பாதை, ஜென்மபூமி பாதை, பக்தி பாதை, ராமர் பாதை போன்ற முக்கிய சாலைகள் அல்லது தெருக்களில் குப்பைகள் அல்லது அசுத்தங்கள் இருக்கக்கூடாது. தற்போது, 3,800 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியில் உள்ளனர், மேலும் பணியாளர்களின் எண்ணிக்கையை 1,500 ஆக அதிகரிக்க வேண்டும்."
கடந்த ஆண்டு, கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ள 84-கோசி பரிக்ரமா பகுதி முழுவதையும் மதுவிலக்கு மண்டலமாக மாநில அரசு அறிவித்தது. மதுபானங்கள் விற்பனை மற்றும் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மதுபான கடைகள் அப்பகுதியில் இருந்து மாற்றப்படும் அல்லது அகற்றப்படும் என்று மாநில கலால் துறை அமைச்சர் நிதின் அகர்வால் அப்போது கூறினார்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் என்சிபியின் அஜித் பவார் அணியுடன் கூட்டணியில் பாஜக முக்கிய அங்கமாக உள்ளது. இருப்பினும், அம்மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு மதுபான விற்பனைக்கு தடை விதிக்க வில்லை.
ஆனால், ஜனவரி 22-ம் தேதி மது மற்றும் இறைச்சித் தடைக்கான கோரிக்கைகளை பாஜக தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம் மாநிலம் முழுவதும் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தற்காலிகக் கட்டுப்பாட்டை கோரி அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில். "ஜனவரி 22 அன்று, அயோத்தியில் ஒரு கும்பாபிஷேகம் உள்ளது. இது மிகவும் புனிதமான நாள். எனவே, அந்த நாளில் மது மற்றும் இறைச்சியைத் தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.,” என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் இதுகுறித்து மகாராஷ்டிர அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.